தேசிய இணைக்கத்துக்கு அறைகூவல் விடுக்கும் பிஎன் முதலில் ஜனநாயக சீரமைப்புகளைச் செய்வதில் மாற்றரசுக் கட்சியை ஆதரித்த “பெரும்பான்மை மக்களுடன்’ ஒத்துழைக்க வேண்டும் என பிகேஆர் தலைவர் அசிசான் வான் இஸ்மாயில் வலியுறுத்தினார்.
“இணக்கம் காண்பதற்குமுன் பெரும்பான்மை மக்களின் குரல் என்ற முறையில், அரசியல் சீரமைப்பு, தேர்தல் சீரமைப்பு, நாடாளுமன்ற சீரமைப்பு ஆகியவற்றின் வழி ஜனநாயக சீரமைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் சிறுபான்மை பிஎன் அரசு எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் எனத் தொடர்ந்து கேட்டுக்கொள்கிறோம்”, இன்று காலை 9வது பிகேஆர் காங்கிரசில் கொள்கை உரை ஆற்றியபோது அசிசான் இவ்வாறு கூறினார்.
பொதுத் தேர்தலில், பிகேஆரும் அதன் கூட்டுக்கட்சிகளான பாஸ், டிஏபி ஆகியவையும் மொத்தம் 51 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றாலும் நாடாளுமன்றத்தில் 40 விழுக்காட்டு இடங்கள்தான் அவற்றுக்குக் கிடைத்தன.
மே 5 தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தேசிய இணக்கம் காண்போம் என்று நட்புக் கரம் நீட்டினார். ஆனால், மறுபுறம் தேர்தலில் மோசடி நிகழ்ந்திருப்பதாகக் குற்றம்சாட்டி பேரணிகள் நடக்கத் தொடங்கியதும் மாற்றரசுக் கட்சித் தலைவர்களைக் கைது செய்யும் படலம் தொடங்கியது.
புதிய உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி, “மவுனமாகவுள்ள பெரும்பான்மை மக்கள்” பக்காத்தான் பேரணிகளை எதிர்க்கிறார்கள் என்றும் நாட்டின் தேர்தல்முறை பிடிக்காதவர்கள் நாட்டை விட்டே வெளியேறலாம் என்றும் கடுமையாகக் கூறினார்.
வான் அசிசா, மலேசியர்களின் “பெரும்பான்மையினர்” பக்காத்தான் பக்கம்தான் என்பதைத் தேர்தல் முடிவு புலப்படுத்துவதை நினைவுபடுத்தினார். ஜாஹிட்டின் பேச்சு, தேசிய இணக்கம் காண்பதில் பிஎன்னுக்கு உண்மையில் அக்கறை இல்லை என்பதைத்தான் காட்டுகிறது என்றாரவர்.
“மலேசியர்கள் 51 விழுக்காட்டினர் வெளிநாட்டுக்குப் புலம்பெயர்ந்து செல்ல வேண்டும் என்பதுதான் பிஎன் தலைவர்களின் விருப்பமா?”,என்றவர் வினவினார்.
மற்ற நாடுகளில், தேர்தல் தொகுதிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கையில் இங்கிருப்பதுபோல் பெரிய வேறுபாடு இருப்பதில்லை என்று வான் அசிசா குறிப்பிட்டார்.
மலேசியாவின் மிகப் பெரிய நாடாளுமன்றத் தொகுதியான காப்பாரில் வாக்காளர் எண்ணிக்கை 144,000. அது மிகச் சிறிய தொகுதியான புத்ரா ஜெயாவைவிட ஒன்பது மடங்கு பெரியது. .புத்ரா ஜெயாவில் 16,000 வாக்காளர்கள்தான்.