சம்பந்தப்பட்ட போலீசாரைப் பணி இடைநீக்கம் செய்ய வேதா கோரிக்கை

vedaதடுப்புக் காவலில் நிகழ்ந்த என். தரமேந்திரன் மரணம் தொடர்பில் விசாரிக்கப்பட்டு வரும் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட மென்மையான நடவடிக்கையைச் சாடிய பிரதமர்துறை துணை அமைச்சர் பி.வேதமூர்த்தி,  இப்படிப்பட்ட நடவடிக்கை போலீஸ்மீதுள்ள மக்களின் நம்பிக்கையைக் குறைத்து விடும் என்று கூறியுள்ளார்.

கொலை என்பது  பிணையில் விடமுடியாத ஒரு கடுமையான குற்றச்சாட்டு  என்று குறிப்பிட்ட வேதமூர்த்தி, அந்நால்வரையும் அலுவலகப் பணிக்கு மாற்றியதற்குப் பதில்   தற்காலிகமாக பணி  நீக்கம் செய்யப்பட்டு விசாரணை முடியும்வரையில் காவலில் வைத்திருக்க வேண்டும் என்றார்.

veda1மலேசிய இண்ட்ராப் சங்கத் தலைவர் என்ற முறையில் இன்று விடுத்த அறிக்கை ஒன்றில் வேதமூர்த்தி இவ்வாறு கூறியுள்ளார்.

“போலீஸ் அதிகாரியோ பொதுமக்களோ சட்டம் அனைவருக்கும் பொதுவானது. எனவே, குறைந்தபட்ச நடவடிக்கை எடுப்பதால் போலீஸ் இரட்டை நியாயம் கடைப்பிடிப்பதாகத்தான் மக்கள் நினைப்பார்கள்”.

அதனால் போலீஸ்மீது மக்களுக்குள்ள நம்பிக்கை குறையும் என்றாரவர்.

 

சந்தேகத்துக்குரிய போலீஸ் அதிகாரிகள்மீதே கடுமையான நடவடிக்கை எடுக்க முடியாதிருக்கும் போலீஸ் படை, அது குற்றச் செயல்களைக் குறைப்பதில் திறமையாக செயல்படும் என்ற நம்பிக்கையை  பொதுமக்களிடம் எப்படி ஏற்படுத்தப் போகிறது என்றும் வேதமூர்த்தி வினவினார்.

போலீசின் நடவடிக்கை, கூட்டரசு அரசமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள “மனித உயிரின் அடிப்படை உரிமையையும் மதிப்பையும்” அது மதிக்கவில்லை என்பதைத்தான் காட்டுகிறது என்றாரவர்.

இண்ட்ராப், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குடன் வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்பாடு கண்டபோது அது கைவிட்ட கோரிக்கைகளில் தடுப்புக் காவலில் நிகழும் இந்தியர் மரணம் நிற்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஒன்றாகும். அக்கோரிக்கை கைவிடப்பட்டதற்காக பல தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.