போலீஸ்காரர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்: தர்மேந்திரன் மனைவி

dharamபோலீஸ் தடுப்புக் காவலில் இருந்த போது மரணமடைந்த தர்மேந்திரனின் மரணத்துடன் தொடர்புபட்டுள்ளதாக கூறப்படும் போலீஸ்காரர்கள் இன்னும் இடைநீக்கம் செய்யப்படாதது குறித்து தர்மேந்திரனுடைய மனைவி ஏமாற்றம் அடைந்துள்ளார். அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் என அவர் கோரினார்.

“அவர்கள் என் கணவரைக் கொலை செய்துள்ளனர். அவர்கள் லாக்கப்பில் இருக்க வேண்டும். மேசை வேலைகளில் அல்ல. அவர்களுக்கு அது கொடுக்கப்படக் கூடாது. உண்மையில் அவர்கள் தூக்கில் போடப்பட வேண்டும்,” என எஸ் மாரி கூறினார்.

“பொது மக்களில் ஒருவர் யாராவது ஒருவரைக் கொன்றிருந்தால் அவர் இன்னும் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருப்பாரா ? இங்கு போலீசார் கொலையைச் செய்துள்ளனர்,” என இரண்டு வயது புதல்வருடைய தாயாரான அவர் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

31 வயதான தர்மேந்திரன் மரணம் தொடர்பில் விசாரிக்கப்படும் போலீஸ்காரர்கள் மேசை வேலைகளுக்கு அனுப்பப்படாமல் கடமையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை நேற்று உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி ஏற்றுக் கொண்டார்.

என்றாலும் அந்த நடவடிக்கையை ‘மிகவும் கவனமாக’ மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
ஏனெனில் போலீஸ்காரர்களுடைய கட்டுகோப்பு சீர்குலைய அனுமதிக்கக் கூடாது என அவர்
சொன்னார்.

மோதல் சம்பவம் ஒன்றின் தொடர்பில் புகார் செய்வதற்காக தர்மேந்திரன் போலீஸ் நிலையத்துக்குச்
சென்றதாகவும் ஆனால் தடுத்து வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அவர் தடுப்புக் காவலில் இருந்த
போது மரணமடைந்தார். ‘சுவாசிப்பதற்குச் சிரமப்பட்டதால்’ அவர் மரணமடைந்தார் என முதலில்
கூறப்பட்டது.

ஆனால் மே 22ம் தேது கோலாலம்பூர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சவப் பரிசோதனையில் அவர் மரணமடைந்ததற்கு தாக்கப்பட்டது காரணம் என முடிவு செய்யப்பட்டது.

பின்னர் போலீசார் தர்மேந்திரன் மரணத்தை குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் கொலை என
வகைப்படுத்தியுள்ளனர்.