தர்மேந்திரா இறப்பில் சம்பந்தப்பட்ட போலீசார் இடைநீக்கம் செய்யப்படுவர்

1 plisபோலீஸ் காவலில் இருந்த என். தர்மேந்திரனின் இறப்புக்குக்  காரணமானவர்கள் எனக் கூறப்படும் போலீஸ் அதிகாரிகள் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்படுவர் என உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜஹிட் ஹமிடி கூறுகிறார்.

“அதற்கான வேலைகள் நடைபெறுகின்றன”, என்றாரவர்.  சம்பந்தப்பட்ட அந்த நான்கு போலீஸ்காரர்களையும் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பது பற்றி வினவியதற்கு ஜாஹிட் இவ்வாறு சுருக்கமாக பதிலிறுத்தார்.

இன்று உள்துறை அமைச்சில் அனைத்துலக செஞ்சிலுவை குழுவின் வட்டாரத் தூதுக்குழுவுக்கான தலைவர் ஜெரிமி இங்கிலாந்தைச் சந்தித்த பின்னர் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் அக்குழுவைச் சந்திக்கும் நிகழ்வில் செய்தி சேகரிக்க மலேசியாகினி அனுமதிக்கப்படவில்லை. ஆனால், அமைச்சின் நுழைவாயிலில் ஜாஹிட்டுடன் ஒரு சிறு நேர்காணலைப் பதிவு செய்ய முடிந்தது.

மலேசியாகினி, உள்துறை அமைச்சின் நிகழ்வு ஒன்றில் செய்திதிரட்ட தடை விதிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். ஜாஹிட் 2009-இல் தற்காப்பு அமைச்சரானபோது அந்த அமைச்சின் நிகழ்ச்சிகளுக்கும் செல்ல  மலேசியாகினிக்குத் தடை விதிக்கப்பட்டது.

11 நாள்களில் போலீஸ் தடுப்புக்காவலில் இருந்த மூவர் இறந்தது பற்றிக் கருத்துரைத்த ஜாஹிட், அதற்காக மொத்த போலீஸ் படைமீதும் பழி போடுவது நியாயமல்ல என்று படையைத் தற்காத்துப் பேசினார்.

போலீஸ்காரர்களில் எவரேனும் விசாரணை செய்வதற்கான நிலையான நடைமுறைகள மீறி இருந்தால், அதற்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும்; அதற்காக மொத்த போலீஸ் படையையும் பொறுப்பாக்குவது சரியல்ல என்றார்.

“எனவே, எதிர்ப்புக் காட்டும் முகமாக போலீஸ் படை முழுவதையும் குறை சொல்வது நியாயமல்ல”, என்று கூறியவர், போலீஸ் விசாரணையின்போது ஏற்படும் மரணங்களில் விட்டுக்கொடுத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.