நஸ்ரி : பிஎன் எம்பி-கள் கட்சிவழியைத்தான் பின்பற்ற வேண்டும்

1 nazriநாடாளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடர் இம்மாதப் பிற்பகுதியில் தொடங்கும். ஆனாலும், பிஎன் எம்பிகள் எப்போதும்போல் கட்சிவழியைத்தான் பின்பற்ற வேண்டும். அதில் மாற்றம் இருக்காது.

நாடாளுமன்றத்தில் பிஎன்னின் இரண்டு உதவி கொறடாக்களில் ஒருவர் என்ற முறையில் முகமட் நஸ்ரி அப்துல் அசீஸ் இன்று இதனைத் தெரிவித்தார்.

“வழக்கமான விவகாரங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கட்சி கொறடா தீர்மானிப்பார்”, என்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் சொன்னார்.

“சமயம், தனிப்பட்டவர் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விவகாரங்கள் என்று வரும்போது அந்தக் கட்டுப்பாடு இருக்காது. மற்ற நேரங்களில் எல்லாம் கட்சிவழியைப் பின்பற்றியே வாக்களிக்க வேண்டும்”.

தம் அமைச்சர் பொறுப்புகளை இன்னொரு உதவிக் கொறடாவான ஷகிடான் காசிமிடம் ஒப்படைத்த பின்னர் நஸ்ரி செய்தியாளர்களிடம் பேசினார்.

நேற்று டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங்,  சுயேச்சை போலீஸ் புகார் ஆணையம் (ஐபிசிஎம்சி) அமைக்கக் கோரும்  தீர்மானம் ஒன்றை பக்காத்தான் ரக்யாட் நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யும் என்றும்  அதற்கு 23 பிஎன் எம்பிகள், பக்காத்தானின் 89 எம்பி-களுடன் சேர்ந்து ஆதரவு அளித்தால் எளிய பெரும்பான்மையில் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் கூறி இருந்தார்.

பிஎன் அரசியல்வாதிகள் பலர், குறிப்பாக மஇகா, மசீச எம்பிகள் ஐபிசிஎம்சி-க்கு ஆதரவு தெரிவித்து பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர்களின் கட்சிகள் அதில் தங்களின் அதிகாரப்பூர்வ நிலைபாட்டை இதுவரை அறிவித்ததில்லை.

அந்த வகையில், கட்சி கொறடா சொல்படி எம்பிகள் வாக்களிப்பதாக இருந்தால் அந்தத் தீர்மானம் நிறைவேற போதுமான வாக்குகள் பக்காத்தானுக்குக் கிடைப்பது சந்தேகமே.

TAGS: