திட்டமிட்ட கலாசார சீர்கேடுகளும், தமிழ் மக்களின் கலாசார அடையாளங்களை இல்லாமல் செய்வதற்கும் வடகிழக்கில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
இன்று அபிவிருத்தி என்ற பேரில் ஆக்கிரமிப்புகள் இடம்பெறுகின்றன. இவைகளை தடுக்கக்கூடிய சக்தி தமிழ் மக்களின் அரசியல் பலம் மட்டுமே. ஆனால், தமிழர்களின் அரசியல் பலத்தை இல்லாமல் செய்வதற்கும் தமிழர்களைக் கொண்டு பல சதிமுயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வடக்கு, கிழக்கு தாயகத்தில் இன்று தமிழர்களுக்கான அரசியல் பலம் எதுவும் இல்லாமல் போகுமானால் எதிர்காலத்தில் தமிழர்கள் தமிழை மட்டுமல்ல, எமது நிலத்தையும் இழக்க நேரிடும் என்று அரியநேத்திரன் எம்பி கூறினார்.
இன்று வடகிழக்கில் இவ்வாறான விடயங்களை பாதுகாப்பதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயலாற்றுகின்றது. இதனைத் தடுப்பதற்கு பாரிய முயற்சிகளில் ஒன்றாக தமிழ் புத்திஜீவிகள் என்று ஒரு சிலரையும் படித்தவர்கள் என்று இன்னும் சிலரையும் அரசாங்கம் சலுகைகளைக் கொடுத்து விலைக்கு வாங்கி தமிழ்த் தேசியத்தை இல்லாமல் செய்யும் முயற்சிகளில் இறங்கியுள்ளது என்று அவர் கூறினார்.
அபிவிருத்தி என்பது நிச்சயமாகத் தேவை. அபிவிருத்தி இல்லாமல் வாழ முடியாது. அபிவிருத்தி என்ற போர்வையில் சில அபகரிப்புகளை செய்வதை விட்டுக் கொடுக்க முடியாது. இன்று மட்டக்களப்பில் எழுவான் கரைப் பகுதியில் ஒரே இரவில் திட்டமிட்டு மூன்று ஆலயங்கள் உடைக்கப்பட்டு விக்கிரகங்கள், தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளன. இதனை சாதாரண கொள்ளைச் சம்பவமாக பார்க்க முடியாது. இதனைச் செய்தவர்களுக்கும் நில ஆக்கிரமிப்பைச் செய்து வருகின்றவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.
படுவான்கரைப் பகுதியிலும் இவ்வாறான சம்பவங்கள் எழா வண்ணம் விழிப்புடன் மக்கள் இருக்க வேண்டும். அதேவேளை, எமது மாணவர்களை ஒழுக்கமுள்ள சமுதாயமாக கட்டியெழுப்ப பெற்றோர்கள், மாணவர்கள் மீது அவதானம் செலுத்த வேண்டும் என்று பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.