‘உலகின் முன்னணி இணையதளங்களூடாக அமெரிக்கா உளவு பார்க்கிறது’

server internetஅமெரிக்க உளவுத்துறையினர் உலகின் முன்னணி இணையதள நிறுவனங்களின் சர்வர்களுக்குள் நுழைந்து உளவுபார்ப்பதாக அமெரிக்க நாளிதழான த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையும் பிரிட்டிஷ் நாளிதழதான த கார்டியன் பத்திரிகையும் தெரிவித்துள்ளன.

தனிநபர்களை இலக்குவைத்து மைக்ரோசாஃப்ட், யாஹு, கூகுள் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட 9 முன்னணி இணையதள நிறுவனங்களின் சர்வர்கள் இவ்வாறு உளவுபார்க்கப்படுவதாக அந்தப் பத்திரிகைகள் கூறியுள்ளன.

சில நபர்களின் நடமாட்டங்களைப் பின்தொடர்வதற்காக தனிப்பட்ட ஆட்களின் வீடியோ பதிவுகள், ஃபோட்டோக்கள், இ-மெயில்கள் போன்றன திரட்டப்படுவதாக அந்தப் பத்திரிகைகள் சுட்டிக்காட்டுகின்றன.

PRISM (பிரிஸ்ம்) என்பதே அரசாங்கத்தின் இந்த ரகசிய உளவுத் திட்டத்தின் பெயர் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

6 ஆண்டுகளாக இந்த உளவுவேலை நடந்துவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமது சர்வர்களுக்குள் நேரடியாக நுழைவதற்கு அரசாங்க நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்று ஃபேஸ்புக், ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் பதில் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்தப் பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகள் தொடர்பில் அமெரிக்க உளவுத்துறைத் தலைவர் ஜேம்ஸ் கிளப்பர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இந்த செய்திகளில் பல தவறுகள் காணப்படுவதாகவும், இப்படியான செய்திகள் பல்வேறு அச்சுறுத்தல்கள் தொடர்பில் உளவுத்துறை நிறுவனங்களின் பணிகளை பாதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

-BBC