‘தொகுதி எல்லை நிர்ணயத்தால் உண்மையில் பாதிக்கப்பட்டது மலாய்க்காரர்களே’

malayதேர்தல் தொகுதிகள் முறைகேடாக நிர்ணயம் செய்யப்பட்டதால் மலாய்க்காரார்களே உண்மையில்  பாதிக்கப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர் வோங் சின் ஹுவாட் கூறுகிறார்.

தேர்தல் தொகுதி எல்லைகள் மறு நிர்ணயம் மீதான கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், பிஎன் எதிர்ப்பு உணர்வுகளை சமாளிக்கும் பொருட்டு மலாய் பெரும்பான்மை தொகுதிகள் தொடர்ந்து
பெரிதாக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஆகவே முறைகேடான தொகுதி எல்லை நிர்ணயத்துக்கு இனவம்சாவளியோ, நிலவியலோ காரணமல்ல. எல்லாம் கட்சி அரசியலை அடிப்படையாகக் கொண்டவை. என அவர் சொன்னார்.

அதற்கு எடுத்துக்காட்டுக்கு அவர் ‘மலாய்க்காரர்களை அதிகமாக’ கொண்ட பாலிங் தொகுதியில் 93,376
வாக்காளர்கள் இருப்பதையும் கலப்புத் தொகுதியான அலோர் ஸ்டாரில் 69,189 வாக்காளர்கள்
உள்ளதையும் சுட்டிக் காட்டினார்.

“அது மலாய்க்காரர்களைத் தண்டிப்பதாகும். காரணம் பாலிங் பாஸ் கட்சியின் கோட்டையாகும். அண்மைய தேர்தல் வரையில் பிஎன் அலோர் ஸ்டாரில் தோல்வி கண்டதே இல்லை. ஆகவே அது கட்சிச் சார்பானது,” என்றார் அவர்.malay1

நகர்ப்புற பூச்சோங் வட்டாரத்தில் உள்ள இரண்டு சட்ட மன்றத் தொகுதிகளிலும் அதே நிலை தான் என  வோங் மேலும் சொன்னார்.

மலாய்க்காரர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஸ்ரீ செர்டாங் அங்கு நிலவும் பிஎன் எதிர்ப்பு உணர்வுகளை முறியடிப்பதற்கு உதவியாக அந்தத் தொகுதி தொடர்ந்து பெரிதாக்கப்பட்டது.

2008ல் அந்தத் தொகுதியில் பிஎன் 45 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றது. ஆனால் 2013ல்  பாஸ் கட்சி அதனை 16,251 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

“நகர்ப்புறங்களில் பிஎன் -னுக்கு செல்வாக்கு இல்லை. தொகுதிகளை பெரிதாக்கினால் தவிர அதற்கு
போதுமான ஆதரவு கிடைக்காது,” என்றார் அவர்.

 

TAGS: