புரோட்டோன் கார் விலைகளை 10 விழுக்காடு குறைக்கும்

protonபுரோட்டோன் கார்களுக்கான புதிய விலப் பட்டியல் நாளை வெளியிடப்படும் என நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறுகிறது. விலைகள் இப்போதுள்ளதைவிட 10 விழுக்காடு குறையும் எனத் தெரிகிறது.

புரோட்டோன் நிர்வாகத் தலைவர் முகம்மட் கமில் ஜமிலை மேற்கோள் காட்டி அச்செய்தி வெளியிடப்பட்டிருந்தது. விலை குறைக்கப்பட்டாலும் தரம் குறையாது என்றவர் உறுதி கூறியதாகவும் அது தெரிவித்தது.

இப்போதைக்கு புரோட்டோன் கார்களின் விலை ரிம38,148 (சாகா FLX)-இலிருந்து ரிம89,012 (எக்ஸோரா) வரை  இருக்கிறது.

புதிய விலைகள் நாளை முத்தியாரா டமன்சாரா விற்பனைக் கூடத்தில் அறிவிக்கப்படும். பொதுமக்களும் அங்கு கார்களுக்கு முன்பதிவு செய்துகொள்ளலாம்.

பிஎன் அதன் தேர்தல் அறிக்கையில் அடுத்த ஐந்தாண்டுகளில் கார்களின் விலைகள் 30 விழுக்காடு குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது.

பக்காத்தானும் கார் விலை குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்தது. ஆனால், அது சுங்க வரியைக் குறைப்பதன்வழி அதைச் செய்யப்போவதாகக் கூறியது.