மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனைப் பிரதேசம் சுக்கான்கேணியில் ஞாயிற்றுக்கிழமை காலை இந்து ஆலய நிர்வாகிகள் மற்றும் மெத்தடிஸ்ட் மிஷன் திருச்சபையினருக்கும் இடையே நடந்த மோதள்களில் மதபோதகர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
அப்பகுதியிலுள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேக காலத்தின் காலை பூசை நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், அங்குள்ள மெத்தடிஸ்ட் திருச்சபை தேவாலயத்திலும் வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
அப்போது திருச்சபையில் வழிபாடுகள் ஒலிபெருக்கி மூலம் நடைபெறுவது தமது பூசைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகிறது என்று பிள்ளையார் ஆலய நிர்வாகிகள் கூறியதை அடுத்து வாய்த் தகராறுகள் முற்றி மோதல்களாக வெடித்தன என்று அப்பகுதியிலுள்ள பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.
இதையடுத்து அந்தத் திருச்சபை தேவாலயமும் அதன் அருகில் இருந்த வீடொன்றும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் பலரிடம் வாக்குமூலங்களை பெற்றுள்ளனர். சந்தேகத்தின் பேரில் இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே அண்மைக் காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இந்து ஆலயங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச் சம்பவங்களை கண்டித்தும் அத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்யக் கோரியும் மாவட்ட இந்து இளைஞர் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனியீர்ப்பு பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
ஆனால் இந்தப் பேரணி வேறொரு தினத்தில் நடைபெறும் என அந்த அமைப்பு அறிவித்துள்ளது.