இலங்கையின் வடக்கே, கிளிநொச்சி மாவட்டத்தில் கொக்காவில் இராணுவ முகாமுக்குச் சென்றிருந்தவேளை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்ட டாக்டர் இரத்தினசிங்கம் சிவசங்கர் திங்களன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் மாவட்ட சுகாதார வைத்திய அதிகரியாகிய இவர், சுமார் ஐந்து மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் தன்னைக் கைது செய்திருந்ததாக அவர் தெரிவித்தார்.
இராணுவப் பயிற்சிக்குத் தெரிவாகியிருந்த இளம் பெண் ஒருவர் அதிலிருந்து விலகுவதற்கு விரும்பியபோது, அது தொடர்பான ஆவணங்களில் கையெழுத்திடுவதற்காக கொக்காவில் இராணுவ முகாமுக்கு அந்தக் குடும்பத்தினருக்கு உதவியாக மொழிபெயர்ப்பதற்காக அவர் சென்றிருந்தார்.
சம்பந்தப்பட்ட பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் வீடு செல்வதற்கு அனுமதித்திருந்த இராணுவத்தினர், உளவு பார்க்கும் நோக்கத்தோடு அவர்களோடு அவர் அங்கு வந்திருந்ததாக சந்தேகம் கொண்டு கைது செய்து மாங்குளம் பொலிசாரிடம் ஒப்படைத்திருந்தனர்.
விசாரணைகளையடுத்து, சட்டமா அதிபரின் ஆலோசணையைப் பொலிசார் கோரியிருந்ததாகவும், நீதிமன்றத்தில் தனது வழக்கு தொடர்பான ஆவணங்களைப் பெற்றிருந்த சட்டமா அதிபர் தனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்குரிய காரணங்கள் இல்லையென்று தெரிவித்ததையடுத்தே நீதிமன்றம் தன்னை விடுதலை செய்துள்ளதாகவும் டாக்டர் சிவசங்கர் தெரிவித்தார்.