இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய மீள்குடியேற்ற பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் முப்பது வருடங்களுக்கு முன்னர் தாங்கள் கைவிட்டுச் சென்ற வயல் காணிகளைத் தங்களுக்குத் திருப்பித்தர வேண்டும் என்று புதனன்று அதிகாரிகளிடம் கோரியிருக்கின்றனர்.
இந்த மக்களுக்கு சொந்தமாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்த 2000 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் காணிகளில் சிங்கள மக்களே விவசாயம் செய்வதாகவும், அவர்களிடமிருந்து அந்தக் காணிகளைப் பெற்றுத் தர வேண்டும் என்று அவர்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வெலிஓயா சம்பத்நுவர பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றைக் கையளித்திருக்கின்றனர்.
இந்த மகஜரைக் கையளிப்பதற்காக முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுவின் முக்கியஸ்தர்கள், மற்றும் இந்தப்பிரதேசத்தைச் சேர்ந்த கிராம அபிவிருத்திச் சங்கங்கள், விவசாய அமைப்புக்களின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட சுமார் 49 பேர் சென்றிருந்தனர்.
இந்தப் பிரதேசத்து மக்கள் மீள்குடியேற்றப்பட்டு இரண்டு வருடங்களாகின்றன. இவர்களுக்கு ஒன்பது மாதங்களுக்கு மாத்திரமே நிவாரண உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. தற்காலிக வீடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் அரசினால் வழங்கப்பட்டிருக்கின்றன.
ஆனால், ”குடியேற்றப்பட்டுள்ள காணிகளில் இருக்கின்றோமே தவிர, எமக்கென அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு, நாங்கள் இடம்பெயர்வதற்கு முன்னர், விவசாயம் செய்து வந்த காணிகளுக்குள் நாங்கள் போக முடியாதிருக்கின்றது. இதனால் எங்களுடைய வாழ்;வாதாரத் தொழிலாகிய விவசாயத்தைச் செய்ய முடியாமல் இருக்கின்றது.
எனவே எங்களையும் விவசாயம் செய்ய அனுமதியுங்கள் என்று மகஜர் மூலமாக சேருநுவர பிரதேச செயலாளரிடம் கேட்டுள்ளோம்” என்றார் கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் கந்தையா அருமைநாயகம்.
இந்த மக்களுடைய காணிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வெலிஓயா சேருநுவர பிரதேச செயலாளர் பிரிவுக்குள் அடக்கப்பட்டடிருப்பதன் காரணமாகவே, அந்த பிரதேச செயலாளரிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது என்று இந்த மகஜரைக் கையளிப்பதற்காகச் சென்ற 40 பேர் குழுவில் சென்று திரும்பியுள்ள முல்லைத்தீவு மாவடட பிரஜைகள் குழு தலைவர் துரைராஜா ரவிகரன் தெரிவித்தார்.
இந்த காணி விடயம் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஏற்கனவே பல தடவைகள் தெரிவித்திருந்தும் சரியான பதில் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று ஊர்மக்கள் கூறுகின்றனர்.
இதுபற்றி கருத்து வெளியிட்ட முல்லைத்தீவு அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், இந்த விடயம் தொடர்பாக உரிய அரச உயர் மட்டத்திற்குத் தெரிவித்துள்ளதாகவும் அவர்களின் பதிலுக்காகத் தாhங்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்தார். -BBC