இலங்கை நடவடிக்கை குறித்து இந்தியப் பிரதமர் அதிருப்தி

manmohan-singhஇலங்கையின் வட மாகாணத்துக்கான தேர்தல் வரவிருக்கும் நிலையில் இலங்கை அரசாங்கம் அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் சில சரத்துக்களின் சாராம்சத்தை குறைக்க திட்டமிடுவதாக வரும் செய்திகள் குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அதிருப்தி அடைந்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சின் ஊடக மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழுவினர் இந்தியாவுக்கு விஜயம் செய்தது குறித்து பேசுகையிலேயே அமைச்சின் பேச்சாளர் ஒருவர் இவ்வாறு தெரிவித்ததாக அது குறிப்பிட்டுள்ளது.

இரா. சம்பந்தர் தலைமையில் வந்த 6 பிரதிநிதிகளைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழு, இந்தியப் பிரதமர், வெளியுறவு அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரைச் சந்தித்ததாகவும் வெளியுறவு அமைச்சின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

த தே கூவின் பிரதிநிதிகள் பிரதமரைச் சந்தித்து உரையாடிய போதே மேற்கண்ட அதிருப்தியை இந்தியப் பிரதமர் வெளியிட்டுள்ளார்.

13வது திருத்தச் சட்டத்தையும் தாண்டிய ஒரு அரசியல் தீர்வு கொண்டுவரப்படும் என்று இலங்கை அரசாங்கத்தால், இந்தியாவுக்கும், ஐநா உட்பட சர்வதேச சமூகத்துக்கும் வழங்கப்பட்ட கரிசனைகள் மீது, தற்போது பிரேரிக்கப்பட்ட பரிந்துரைகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்வதன் அடிப்படையில் ஒரு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கும் இந்த மாற்றங்கள் பொருத்தமற்றவை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலன்கள் மற்றும் நல வாழ்வு குறித்து தாம் ஆழமான கரிசனைகளைக் கொண்டிருப்பதாகவும் இந்தியப் பிரதமர் கூறியுள்ளார்.

இலங்கை தமிழர்கள் கௌரவத்துடனும், சமத்துவமான குடிமக்களாகவும் வாழ்வதற்கான எதிர்பார்ப்பை வலியுறுத்தியுள்ள இந்தியப் பிரதமர், தமிழர்கள் சமத்துவத்துடனும், நீதி மற்றும் சுயமரியாதையுடனும் வாழ தேவையான அனைத்தையும் இந்தியா செய்யும் என்றும் கூறியுள்ளார்.-BBC

TAGS: