ஆப்கானிஸ்தானில் தலிபான் பிரச்சினைகளில் உதவி புரிய வந்த நேட்டோ படைகள் 2014ஆம் ஆண்டில் திரும்பிச் செல்லும் தீர்மானத்தில் இருக்கின்றன. அதனால், ஆப்கான் அரசே, நாட்டின் பாதுகாப்பை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் கடந்த 18ஆம் தேதியன்று அந்நாட்டு ராணுவம் வசம், நேட்டோ படைகள் பொறுப்பை ஒப்படைத்தன.
அதே சமயம் தலிபான் இயக்கம் தன்னை அரசியல் இயக்கமாக உருவகப்படுத்திக் கொள்ள வேண்டி கத்தாரின் தலைநகரான தோஹாவில் அலுவலகம் ஒன்றினைத் திறந்தது. அமெரிக்க அரசும் இரு பிரிவினருக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது.
தனது பிரதிநிதிகளையும் தோஹாவிற்கு அனுப்புவதாகக் கூறிய ஆப்கான் அதிபர் கர்சாய், பின்னர் அமெரிக்காவின் பேச்சுவார்த்தை அழைப்பிற்கு மறுத்துவிட்டார். அமெரிக்க அரசு கூறியதுபோல், தோஹாவில் உள்ள தலிபான் அலுவலகம் தூதரகம் போலவோ, அயல்நாட்டு அரசாங்க அலுவலகம் போலவோ காணப்படாததினால் அதிபர் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்று காரணம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆப்கான் அரசின் தகவல் அதிகாரி பயிக் வாஹிதி, அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி ஆப்கான் அதிபர் கர்சாயுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகத் தெரிவித்துள்ளார். அவர் கூறியபடி, தலிபான் அலுவலகத்தில் பறக்கும் அவர்கள் கொடியும், அவர்களது இயக்கத்தின் பெயர்ப் பலகையும் நீக்கப்படுதல் வேண்டும்.
மேலும் அமெரிக்கா ஆப்கான் அரசுக்கு ஆதரவான கடிதம் ஒன்றினையும் அளிக்கவேண்டும் என்று ஆப்கன் அரசு எதிர்பார்ப்பதாக வாஹிதி குறிப்பிட்டார். இதன்படி செய்து தரப்பட்டால் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் கர்சாய் விருப்பம் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்..
தலிபான் இயக்கமும், தங்களுடைய அலுவலகம் திறக்கப்பட்ட பின்னர், தற்போது சிறைக் கைதிகளாக குவாண்டனாமோவில் இருக்கும் தங்கள் செயல்வீரர்கள் ஐந்து பேரை விடுதலை செய்தால், 2009ஆம் ஆண்டு சிறை பிடிக்கப்பட்ட அமெரிக்க வீரர் ஒருவரை விடுதலை செய்வதாக ஒப்புக்கொண்டுள்ளது. முதலில், கைதிகள் விடுதலை செய்யப்பட்டபின் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தலிபானின் தகவல் அதிகாரி சுஹாயில் தெரிவித்தார்.
சிரியாவின் உள்நாட்டுப் போர் குறித்த சநதிப்பில் வரும் சனிக்கிழமையன்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜான் கெர்ரி பங்கு கொள்ளவேண்டும். ஆயினும் ஆப்கான் பிரச்சினை குறித்துப் பேசவும் அவர் தோஹாவிற்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.