கடந்த இரண்டு வருடங்களாக சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுக் கலவரங்கள், மக்களின் வாழ்க்கையை பாதித்தது மட்டுமின்றி, அங்குள்ள புராதனமான பாரம்பரியம் மிக்க கலை சின்னங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன என்று யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
இடையூறாது ஒலிக்கும் துப்பாக்கி, குண்டு முழக்கங்களும், போர் நடவடிக்கைகளும், பலவீனமான பாதுகாவல்களும் இந்த புராதன கலைச்சின்னங்களின் உலக மதிப்பைக் காப்பாற்றவோ, பாதுகாக்கவோ மேற்கொள்ளவிடாமல் செய்கின்றன என்று யுனெஸ்கோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புராதன நகரங்களான டமாஸ்கஸ், போஸ்ரா, அலெப்போ, பால்மிராவின் ஒயாசிஸ் சோலைவனங்கள், கிரேக் டி செவாலியே, காலட் சலா எல்-டின் அரண்மனைகள் மற்றும் சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள கிராமங்கள் ஆகிய ஆறும் பாரம்பரிய சின்னங்களாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
தற்போது இவை அனைத்துமே அழிந்துவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்று நாம் பென்னில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் கல்வி, விஞ்ஞானம் மற்றும் கலை அமைப்புக் குழுவின் வருடாந்திர கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாக்கத் தேவையான ஆதரவு பெறவேண்டும் என்பதே தங்களது நோக்கம் என்று யுனெஸ்கோவின் தகவல் அதிகாரி ரோனி அமெலன் குறிப்பிட்டார்.
சிரியாவின் அண்டை நாடுகளையும் சர்வதேச வர்த்தக சமூகத்தையும், சிரியாவிலிருந்து கொண்டுவரப்படும் கலைப் பொருட்களை வாங்க வேண்டாம் என்று யுனெஸ்கோ கேட்டுகொண்டுள்ளது.
மேலும், கலவரங்கள் ஆரம்பித்த நாள் முதலாக பாரம்பரிய சின்னங்கள் காப்பாற்றப்படவேண்டும் என்பதனையும் அனைத்து கட்சித் தரப்பினரிடையேயும் யுனெஸ்கோ எடுத்துக் கூறி வருகின்றது.