நாளை மலரும் தமிழீழத்தில் முஸ்லிம் மக்களின் உரிமைகள்: பிரதமர் உருத்திரகுமாரன் – இம்தியாஸ் ரசீக் கருத்தாடல்

eelam27613aநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பில் கடந்த மே 18ம் நாள் முரசறையப்பட்டிருந்த தமிழீழ சுதந்திர சாசனத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் உரிமைகள் தொடர்பிலான விடயங்கள் பல்வேறு முஸ்லிம் பிரதிநிதிகளினால் வரவேற்கப்பட்டுள்ளது.

முரசறையப்பட்டிருந்த தமிழீழ சுதந்திர சாசனத்தில் நிலைப்பாடுகள் தொடர்பிலான வரைவின் 10வது சரத்தில் ‘தமிழீழத்தில் வாழும் எண்ணிக்கையில் சிறுபான்மையினரான மக்களின் உரிமைகள் மதிப்பளித்துப் பேணப்படும். முஸ்லீம் மக்களின் தனித்துவமான அடையாளங்கள் மதிப்பளிக்கப்பட்டு அவர்கள் விரும்பும் வகையில் தமது வாழ்வை ஒழுங்கமைத்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்படும். தமிழீழத்தில் தமது வகிபாகத்தினைத் தாமே உருவாக்குவதில் பங்குபற்றும் உரிமை முஸ்லீம் மக்களுக்குக் கொடுக்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழீழ சுதந்திர சாசன முரசறைவினை மையமாக கொண்டு இடம்பெற்றிருந்த மாநாட்டில் முஸ்லிம் பிரதிநிதியாக பங்கெடுத்துக் கொண்டிருந்த Temple University – philadephia விரிவுரையாளர் இம்தியாஸ் ரசீக் அவர்கள் தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

இலங்கைத்தீவில் தமிழீழம் நோக்கிய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் சமூக – அரசியல் உறவுநிலை குறித்து இம்தியாஸ் ரசீக் அவர்களினால் முன்வைக்கப்பட்டிருந்த கருத்துக்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பதிலுரைக் கருத்துக்களை வழங்கியிருந்தார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சமாதான பேச்சுவார்த்தைக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளுடன் மேற்கொள்ளப்பட்ட நல்லிணக்க முன்னெடுப்புகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்து ஆதாரபூர்வமாக ஆழமான முறையில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களினால் முன்வைக்கப்பட்டது.

இலங்கைத்தீவில் தமிழீழம் நோக்கிய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் பேசும் அனைத்து தரப்பினரதும் ஒன்றிணைவினை மையமாக கொண்டு பரஸ்பர உரையாடலாக அமைந்த இக்கருத்துப் பரிமாற்றம் ஆரோக்கியமானதாக அமைந்திருந்தது.

இதேவேளை சமீபத்திய காலங்களில் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களது சமய, பண்பாட்டு உரிமைகளுக்கு எதிராக சிங்கள பௌத்த பேரினவாதிகிளால் மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள் முஸ்லிம்களும் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே என்பது இங்கு குறிப்பிடதக்கது.

TAGS: