மூன்று பேரின் மரபணுக்கள் கலந்து குழந்தை உருவாக்க பிரிட்டன் அனுமதி

worldnews29613aமூன்று பேரின் டிஎன்ஏ மரபணுக்களைக் கொண்டு குழந்தைகளை உருவாக்கக்கூடிய நவீன ஐவிஃஎப் தொழிநுட்பத்துக்கு, உலகின் முதல்நாடாக பிரிட்டன் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஐவிஃஎப் என்பது பெண்ணின் கரு முட்டையையும் ஆணின் விந்தணுவையும் உடலுக்கு வெளியே கருக்கட்டச் செய்து பின்னர் பெண்ணின் கர்ப்பப்பைக்குள் வளரச்செய்கின்ற தொழிநுட்பம்.

இந்த தொழிநுட்பத்தில் மூன்றுபேரின் மரபணுக்களைச் சேர்க்கும் நவீன முறைக்கே பிரிட்டன் அரசு சம்மதித்துள்ளதது.

இந்த மூன்று-பேர் ஐவிஃஎப் தொழிநுட்பம் மூலம் தாயிடமிருந்து குழந்தைக்கு மாறும் நுண்ணிய இழைமணி சார்ந்த (Mitochondria) நோய்களை தவிர்க்கமுடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆங்கிலத்தில் Mitochondria எனப்படும் இழைமணி உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கும் நுண்ணுறுப்பாகும். அது தாயின் கரு முட்டையிலிருந்தே குழந்தையின் உடலுக்கு கடத்தப்படுகிறது.

நலிவடைந்த இழைமணி 6,500-இல் ஒரு குழந்தையை பாதிக்கிறது. உடல் நலிவடையவும் தசைகள் சோர்வடையவும் கண்கள் குருடாகவும் இருதயம் பலவீனமடையவும் இவை காரணமாகின்றன. உயிரழப்புகளுக்கும் வழி வகுக்கின்றன.

இதனால் இன்னொருவரின் கருமுட்டையிலிருந்து இழைமணியைப் பெற்றுக்கொள்வதன்மூலம் இவ்வகை நோய்களை தவிர்க்கமுடியும் என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஒரு குழந்தை உருவாகக் காரணமாகின்ற இரண்டு பேரின் டிஎன்ஏ மரபணுக்களில் எந்தவிதமான மாற்றத்தையும் இந்த தொழிநுட்பம் செய்துவிடாது. ஆனால் மூன்றாவது நபரின் மிக நுண்ணிய இழைமணி மரபணுவும் குழந்தையுடன் கலப்பதை தவிர்க்க முடியாது போகும்.

ஆனால் இந்த நடைமுறை மனித வாழ்வியல் விழுமியங்களுக்கு ஒத்துவராது என்று எதிர்ப்பாளர்கள் விமர்சிக்கின்றனர். -BBC