13 ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான எந்தவொரு அரசியல் தீர்வினையும் தமிழ் மக்கள் நிராகரிக்கின்றனர் – இலங்கை தீவில் இன முரண்பாட்டுக்கான அடிப்படை காரணிகளை நிவர்த்தி செய்யவோ அன்றி தமிழ் தேசிய அபிலாசைகளை பாதுகாக்கவோ இது தவறுகிறது. ஒற்றையாட்சிக்குரிய மத்திய வடிவமைப்புக்குள் நிறுவப்பட்டுள்ள 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமானது இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் நியாயபூர்வமான அபிலாசைகளை பூர்த்தி செய்ய முடியாது.
இந்த திருத்த சட்டமானது எந்த வகையிலுமே முரண்பாட்டிற்கான தீர்வுக்கான ஒரு தொடக்கப் புள்ளியாகவோ, இடைக்கால புள்ளியாகவோ அன்றி இறுதிப் புள்ளியாகவோ அமையவில்லை என்பதுடன் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் பேச்சுவார்த்தை மூலமாக ஏற்படக்கூடிய எந்தவொரு நிலையான தீர்வினையும் தடுப்பதாக இருக்கிறது. தமிழ் தேசத்துடன் கலந்தாலோசிக்காமல், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் நலன்களை கருத்தில் கொண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த தோல்வியடைந்த மற்றும் ஆதரிக்கப்படாத திருத்தச் சட்டத்தை பிரித்தானிய தமிழர் பேரவை கடுமையாக நிராகரிக்கிறது.
இந்த திருத்தச் சட்டத்திலே பல குறைகள் இருக்கின்றன: ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மகான ஆளுநரினாலேயே நிறைவேற்று அதிகாரம் அமுல்படுத்தப்படும், ஆளுநரினாலேயே மாகாணத்தின் பொதுச் சேவைகள் கட்டுப்படுத்தப்படும், மாகாண சபையினை கலைக்கும் அதிகாரத்தினை ஜனாதிபதி கொண்டிருக்கிறார், முதலமைச்சரின் ஆலோசனைகள் அல்லது அறிவுறுத்தல்களுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவரல்லர், ஆளுநரின் நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதியினால் கட்டுப்படுத்தப்படக் கூடியது, ஆளுநரின் அனுமதி இன்றி மாகான அரசாங்கம் மாகாண நிதியினை கையாள முடியாது, பொலிஸ் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான அதிகாரம் ஜனாதிபதியின் வசம் இருக்கிறது, அரச காணிகளை பகிர்ந்தளிக்கும் அதிகாரம் ஜனாதிபதியின் கைகளில் உள்ளது, ஆகியவை அவற்றுள் சிலவாகும்.
இந்த குறைபாடுகள் மற்றும் போதுமான ஏற்பாடுகள் இன்மை காரணமாக, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட இந்த இருதரப்பு உடன்படிக்கையானது, கைச்சாத்திடப்பட்ட நாள் முதல் இன்று வரை, தமிழ் மக்களினாலும் அவர்களது அரசியல் தலைமைகளினாலும் பல்வேறு காலகட்டங்களில் தீர்க்கமாக நிராகரிக்கப்பட்டிருக்கிறது. தற்போதுள்ள மாகாண சபை முறைமையின் கீழ் தமிழர் தாயகத்தில் இலங்கை அரசு மேற்கொண்ட படுகொலைகள், கலவரங்கள், நில அபகரிப்பு மற்றும் குடியேற்றங்கள் ஆகிய இனவழிப்பு செயற்பாடுகள் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பின்னரான யதார்த்த வாழ்வினை எதிர்வு கூறுகின்றன. தமிழ் மக்களின் தேசிய பிரச்சனைக்கு நேர்மையான ஒரு தீர்வினை வேண்டுகின்ற அனைவரும், 13 ஆவது திருத்தச் சட்டத்தையோ அன்றி வலுவற்றதாக்கப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தையோ தமிழ் மக்கள் மீது திணிப்பதற்கு இலங்கை அரசும் சில வெளிச் சக்திகளும் ஏற்ப்படுத்தியுள்ள பொறிக்குள் சிக்கிவிடாமல் விழிப்பாக இருந்துகொள்ள வேண்டும்.
13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழ் மக்கள் மீது திணிப்பதற்கு முன்னர், அதனை தன்னுடைய நலன்களுக்கேற்ப வலுவற்றதாக்கும் நோக்கில் இலங்கை அரசானது தனது கடும் போக்கு கூட்டாளிகள் மற்றும் தீவிர தேசியவாத சக்திகளினூடாக, இந்த திருத்த சட்டத்திற்கு எதிரான கடுமையான கருத்துக்களையும் இனத்துவேச கருத்துக்களையும் ஊக்குவிக்கும் ஒரு அரசியல் பிரசாரத்தை தற்போது முன்னெடுத்திருக்கிறது. சமகால தென்னிலங்கை அரசியல் அரசியல் அவதானிகளுக்கு இது தெளிவாக புலப்படுகிறது. மறு புறத்தில், இலங்கையில் தமிழ் மக்களை பாதுகாத்தல் என்ற போர்வையில், சிங்கள- தமிழ் அரசியல் அரங்கில் ‘இரட்சகர்’ வகிபாகம் மேற்கொள்ள விரும்பும் சில வெளிநாட்டு சக்திகள், 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையான அளவில் அமுல்படுத்துவதற்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.
இந்த அடிப்படையில், தாயகத்தில் உள்ள எமது மக்களுடன் பிரித்தானிய தமிழர் பேரவை ஒன்றுபட்டு நிற்பதுடன், 13 அவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான எந்த ஒரு அரசியல் முயற்சிகளும் சாத்தியமாகாது என்றும் இலங்கையில் நிலையான ஒரு தீர்வினை ஏற்படுத்தாது என்றும் குறிப்பிடுகிறது. தமிழ் மக்களின் தேசிய பிரச்சனைக்கான எந்த ஒரு அரசியல் தீர்வும் சர்வதேச மத்தியஸ்தம் மூலமான ஒரு சர்வசன வாக்கெடுப்பின் மூலமாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்துகிறது. அத்தகைய ஒரு தீர்வே இலங்கைத் தீவில் நிலையான ஒரு தீர்வுக்கு வழிவகுக்க முடிவதுடன் தமிழ் மக்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார அபிலாஷைகளை திருப்திப்படுத்தவும் முடியும்.