விடுதலைப் புலிகள் மீதான தடை செல்லும்: சென்னை நீதிமன்றம்

eelam02713bஇந்தியாவில் விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தடை 2010 ஆம் ஆண்டு நீட்டிக்கப்பட்டது செல்லும் எனறு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் 1991ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. அதன் பின்னர், இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை அத்தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2010ஆம் ஆண்டு மே மாதம் தடையை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று, அது குறித்து விசாரிக்கவென நியமிக்கப்பட்ட நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையிலான தீர்ப்பாயம் கூறியது.

ஆனால், அந்த முடிவினை எதிர்த்து சிறைவாசிகள் உரிமை மையத்தின் இயக்குநர் புகழேந்தியும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அவர்களின் மனுக்கள் மீதான விசாரணை கடந்த ஆண்டு மே மாதம் முடிந்து, ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு இன்று திங்கள் சென்னையில் வெளியிடப்பட்டது.

நீதிபதிகள் எலிபி தர்மாராவ், எம். வேணுகோபால் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், ‘விடுதலைப்புலிகள் இந்தியாவில் பல கொடிய செயல்களைப் புரிந்திருக்கின்றனர். அவர்களது தமிழீழத்தில் இந்தியாவில் சில பகுதிகளும் அடங்கும். எனவே தடை நீட்டிப்பு செல்லும்’ என்று தீர்ப்பளித்திருக்கிறது.

எப்படியும் தீர்ப்பாயம் புதுடில்லியில் நிலை கொண்டிருந்ததால் அதன் முடிவின் மீது தீர்ப்பளிக்கும் உரிமை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இல்லை எனக்கூறி, தடை நீட்டிப்பு செல்லும் என்ற தீர்ப்பிற்கெதிரான மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இதனிடையே 2012ல் மீண்டுமொருமுறை விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிக்கப்பட்டிருக்கிறது, அதனை எதிர்த்தும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. -BBC

TAGS: