விடுதலைப் புலிகளின் முன்னாள் மூத்த தளபதிகளில் இருவரான ராம் மற்றும் நகுலன் இருவரும் எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராம் மற்றும் நகுலன் இருவரும் விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண மூத்த தளபதிகளாக இருந்ததுடன், அம்பாறை மாவட்டத்தின் கஞ்சிகுடிச்சாறு பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து விடுதலைப் புலிகளுக்கு பலம் சேர்த்தவர்கள்.
கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முற்றுப் பெற்ற போது, அதனை தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வதற்கு தாம் தயாராக இருப்பதாக இவர்கள் இருவரும் மறைவிடமொன்றில் இருந்து அறிவித்திருந்தார்கள்.
எனினும் அவர்கள் இருவரும் ராணுவ புலனாய்வுப் பிரிவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அப்போது சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்தன.அதனை நிரூபிக்கும் வகையில் அண்மையில் நகுலன் யாழ்ப்பாணத்தில் வைத்து திருமண பந்தத்தில் இணைந்து கொண்டபோது, அவரது திருமண நிகழ்வில் படைப் புலனாய்வாளர்களின் பிரசன்னம் அதிகளவில் காணப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் புனர்வாழ்வு பெறாத நிலையில் வெளியில் சுதந்திரமாக நடமாடுவதன் மூலம் படைத்தரப்பின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் இவர்கள் இருவரையும் ஆளுந்தரப்பு வேட்பாளர்களாக அறிவிக்கக் காத்திருந்த அரச தரப்புக்கு இது பெரும் அடியாக இருந்தது. இதனையடுத்து இவர்கள் இருவரும் தற்போது ஒருமாத கால புனர்வாழ்வு நடவடிக்கைக்காக அவசர அவசரமாக உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.
பொலன்னறுவை மாவட்டத்தின் சேனைக்குடியிருப்பு பகுதியில் இவர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.அதன் பின்னர் உத்தியோகபூர்வமாக சிவில் சமூத்துடன் இணைத்துக் கொள்ளப்படும் இவர்கள், வரும் மாகாண சபைத் தேர்தலில் ஆளுந்தரப்பு வேட்பாளர்களாக களமிறக்கப்படவுள்ளனர்.
இதற்கிடையே ஆளுந்தரப்பு வேட்பாளராக களமிறக்கப்படும் நோக்கில் விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் பொறுப்பாளர் தமிழினி, தேர்தலில் போட்டியிடுவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். எனினும் அரச தரப்பின் கடும் அச்சுறுத்தலை அடுத்து அரசுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட அவர் சம்மதம் தெரிவித்திருப்பதாக அறியக் கிடைத்துள்ளது.