ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் தொடர்பான அனைத்து விடயங்களையும் மறந்துவிட்டு சமூகத்துடன் இணைந்து இயல்பு வாழ்க்கை மேற்கொள்ள முன்வருமாறு புலிகளின் மூத்த தளபதி ராம் அறிவுரை கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண மூத்த தளபதியாக இருந்த ராம், மட்டக்களப்பு வெல்லாவெளியில் இருக்கும் தனது தாயாரைச் சந்திப்பதற்காக அண்மையில் சென்றிருந்தார்.பின்னர் அப்பகுதியில் இருக்கும் முன்னாள் போராளிகள் சிலரையும் சந்தித்து அவர் உரையாடியிருந்தார்.
அப்போது ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் அதில் ஈடுபட்டவர்களின் வாழ்வை திசைதிருப்பி விட்டதாகவும், இனிவரும் காலங்களில் அவ்வாறான ஒரு போராட்டம் சாத்தியமில்லை என்றும் ராம் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைந்து இயல்பு வாழ்க்கை மேற்கொள்ள முன்வரவேண்டும் என்றும் அவர் அறிவுரை கூறியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் பின்னரே இராணுவத்தின் புனர்வாழ்வு நடவடிக்கைக்கு தன்னையும் உட்படுத்திக் கொள்ள புலிகளின் மூத்த தளபதி ராம் முடிவெடுத்ததாக தெரிய வருகிறது.
தற்போது அவரும் இன்னொரு மூத்த தளபதியான நகுலனும் பொலனறுவை அண்மித்த சேனைக்குடியிருப்பு பகுதியில் இராணுவத்தின் புனர்வாழ்வு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.