13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து இந்தியாவின் பேச்சைக் கேட்கக் கூடாது என்றும், தேசிய பிரச்சினையை சிறிலங்கர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதற்கு, இந்தியாவுடன் கொண்டுள்ள உறவுகளை இழப்பது என்று அர்த்தமில்லை. ஆனால், பிரச்சினை இருந்தால், இலங்கையர்களால் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும். இந்தியாவினால் அல்ல. தேசியப் பிரச்சினைக்கு உள்ளகத் தீர்வு ஒன்றே காணப்பட வேண்டும்.
13வது திருத்தச்சட்டம் தொடர்பான விவாதங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பாதிக்காது. இந்தியா எமது நண்பன். தொடர்ந்தும் நல்ல உறவுகளை நாம் கொண்டிருக்க வேண்டும்.
இது எமது உறவுகளைப் பாதிக்கும் ஒரு விவகாரமாக இருக்கக்கூடாது. இதனை இந்தியா புரிந்து கொள்ளும் என்பது எனது கருத்து.
இது இலங்கையர்களின் விவகாரம் என்று இந்தியா விளங்கிக் கொள்ள வேண்டும்.நாமே இதனைத் தீர்க்க வேண்டியுள்ளது.
இன அடிப்படையிலான மாகாணங்கள் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது. இது தீர்வு அல்ல, இது தோல்வியடைந்து விட்டது.
தமிழர்கள் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் வசிக்கிறார்கள், முஸ்லிம்களும் கூட.
எனவே அவர்களின் பிரச்சினையை மாகாணசபைகள் எவ்வாறு தீர்க்க முடியும்?
நிர்வாகத்தை பரவலாக்குவதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால், இன, மத, மொழி, சாதி அடிப்படையில் அது இடம்பெறுவதில் நம்பிக்கையில்லை.
இந்த நாடு எல்லா இலங்கையர்களுக்கும் உரியது, அதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.