இராணுவப் புலனாய்வு பிரிவின் அதிகாரியான முத்தலிப் போன்றவர்களை மதிப்பதாகவும் இராணுவத்தில் இருந்த 93 முஸ்லிம்கள் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தனர் எனவும் ஆனால் முஸ்லிம் காங்கிரஸில் உள்ள எவரும் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்யவில்லை எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகளை இல்லாதொழிக்கும் தேசிய ஒன்றியம் மகரகம சந்தியில் நேற்று முன்தினம் நடத்திய மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,முஸ்லிம் மக்களை வடக்கில் இருந்து விரட்டிய போது, முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாப தலைவர் அஸ்ரப் போன்றவர்கள் என்ன செய்தனர்? ஜாதிக ஹெல உறுமயவே அன்று முஸ்லிம் மக்களின் உரிமைகள் பற்றி பேசியது.
அன்று காட்டுக்கு விறகு வெட்டச் சென்றிருந்த 07 முஸ்லிம்களை விடுதலைப்புலிகள் கொலை செய்தனர். அவர்களின் சடலங்களை எங்கள் கைகளில் ஏந்தியே புதைத்தோம். ஹக்கீம் போன்றவர்கள் அதில் கலந்து கொள்ளவில்லை எனவும் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.
பயங்கரவாத அரசியல் முன்னணிகள் வடக்கில், ஈழத்தை உருவாக்குவதற்காக எமது பிள்ளைகள் உயிர்களை தியாகம் செய்யவில்லை. நாட்டின் பெருபான்மையான மக்களின் உரிமைகளை பறித்தே அன்று ஜே.ஆர். ஜயவர்தன மாகாண சபை முறைமையை கொண்டு வந்தார்.
அது வரலாற்றில் பாரிய காட்டிக்கொடுப்பாகும்.தமிழர்களின் தாயக கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட ஜயவர்தன இந்தியாவுக்கு வழங்கிய வாக்குறுதிக்கும் அமைய மாகாண சபைகளை ஏற்படுத்தினார்.எனினும் நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கு அமைய தர்ம சமூகத்தை கட்டியெழுப்பவில்லை.
நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்ற இடமளிக்கவில்லை.நீதிமன்ற தீர்ப்புகளை புறந்தள்ளி விட்டு, மாகாண சபை தொடர்பான திருத்தச் சட்டத்தை நிறைவேற்றினார். நாட்டின் சட்டத்திற்கும், மக்களின் விருப்பத்திற்கும் எதிராகவே ஜயவர்தன அன்று மாகாண சபைகளை கொண்டு வந்தார் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.