எகிப்தில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரான முகமது முர்ஸியை அந்நாட்டின் இராணுவம் பதவியில் இருந்து அகற்றியுள்ள நிலையில், நாட்டின் புதிய இடைக்கால அதிபராக தலைமை நீதிபதி பொறுப்பேற்றுள்ளார்.
கெய்ரோவில் நடந்த ஒரு வைபவத்தில் அரசியல் சாசன நீதிமன்றத்தில் தலைமை நீதியரசர் அத்லி மன்சூர் இடைக்கால அதிபராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
அடுத்த தேர்தல் நடக்கும் வரை அத்லி அதிபராக செயல்படுவார் என்பதாக இராணுவத்தின் திட்டம் அமைந்துள்ளது.
முகமது முர்ஸியும் அவது ஆலோசகர்களும் அதிபர் பாதுகாப்பு படையின் தலைமையகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்றும், வெளியுலகத்துடன் தொடர்புகொள்ள அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும் முர்ஸி சார்ந்துள்ள முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் சார்பாகப் பேசவல்ல கெஹாத் அல் ஹத்தாத் தெரிவித்துள்ளார்.
எகிப்தின் சர்ச்சைக்குரிய புதிய அரசியல் சாசனம் இடைநீக்கம் செய்யப்படுவதாகவும், துறைசார் நிபுணர்களால் வழிநடத்தப்படும் புதிய இடைக்கால அரசாங்கம் ஒன்று நிறுவப்படும் என்றும் இராணுவத்தின் தலைவர் ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல் சிஸ்ஸி புதன்கிழமை மாலை அறிவித்திருந்தார்.
இராணுவத்தின் நடவடிக்கையை ஒரு அதிரடி ஆட்சிக் கவிழ்ப்பு என தான் தடுத்துவைக்கப்படுவதற்கு முன்பாக முர்ஸி வர்ணித்திருந்தார். -BBC