ஐக்கிய ராஜ்ஜியத்தில் அரசியல் தஞ்சம் கோரும் இலங்கையர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கும்போது, போரின்போது அவர்களின் செயல்பாடு மற்றும் புலம் பெயர்ந்த நாடுகளில் அரசியல் நடவடிக்கைகளில் அவர்கள் காட்டிய ஈடுபாடு போன்ற காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்று பிரிட்டிஷ் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.
தஞ்சம் கோரிகளின் மனுக்களை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக மனுதாரரின் நாடு குறித்த பரிந்துரையின்படி (country guidance) அதிகாரிகள் செயல்பட வேண்டும்.
சமீபத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் விடுதலைப் புலிகள் அமைப்போடு தொடர்புடையவர்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்தபடி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள்கூட இலங்கைக்கு அனுப்பப்பட்டால் துன்புறுத்தப்படலாம் என்று குடியேற்றம் தொடர்பான உயர் தீர்பாயம் தீர்ப்பளித்துள்ளதாக வழக்கறிஞர் அருண் கணநாதன் பிபிசியிடம் தெரிவித்தார்.
தஞ்சம்கோரிகள் தொடர்பாக நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்புகள் பெரும்பாலான சமயங்களில் அந்தக் குறிப்பிட்ட வழக்குக்கு மட்டுமே பொருந்தக் கூடியது என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் கூறிவருகின்றனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஐக்கிய ராஜ்ஜியத்தின் உள்துறை அமைச்சு மேன்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது.
இந்த வழக்கு விசாரணையின்போது, தஞ்சம் கோரிகள் குறித்த பரிந்துரையை வழங்க 9 நாட்கள் விசாரணை நடந்ததாகவும், இந்த வழக்கின் தீர்ப்பு மற்றவர்களுக்கும் பொருந்தக் கூடியது என்றும் அருண் கணநாதன் தெரிவித்தார்.
நிராகரிக்கபப்பட்ட தஞ்சம்கோரிகளை இலங்கைக்கு திரும்ப அனுப்பக் கூடாது என்றும் மனித உரிமை அமைப்புகள் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றன.