எகிப்தில் அதிபர் மொஹமட் மொர்ஸி பதவி கவிழ்க்கப்பட்டமைக்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு இராணுவம் தேசிய நல்லிணக்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
முன்னாள் அதிபர் மொர்ஸிக்கு இன்னும் அங்கு கணிசமான ஆதரவு இருப்பதாக, அவர் அங்கம் வகிக்கும் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி நம்புவதாக எகிப்திலுள்ள செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
இதேவேளை, அவருக்கு எதிரானவர்களும் தலைநகர் கெய்ரோவிலும் மற்ற நகரங்களிலும் வீதிகளில் இறங்கி போராடத் தயாராகிவருவதாக தெரியவருகிறது.
முன்னதாக, இடைக்கால அரசாங்கத்தில் பங்கெடுக்குமாறு இடைக்கால அதிபர் விடுத்த வேண்டுகோளை இஸ்லாமிய-வாத முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியினர் நிராகரித்துவிட்டனர்.
இராணுவம் நாட்டு மக்களுக்காகவே செயற்பட்டுள்ளதாகவும் அரசியல் நடவடிக்கைகளில் அவர்களின் பங்கு இருக்காது என்றும் எகிப்தின் எதிரணித் தலைவர் மொஹமட் எல் பராதே பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில், அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி அளிப்பதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஆட்சியிலிருந்து இறக்கப்பட்ட முன்னாள் அதிபர் மொர்ஸியும் அவரது முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். -BBC