சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு தேனை விட இனிப்பானது என்று பாகிஸ்தானின் புதிய பிரதமர் நவாஸ் ஷெரிப் கூறியுள்ளார்.
தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக சீனா சென்றுள்ள நவாஸ் ஷெரிப், சீனாவுடனான எட்டு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளார்.
பொருளாதார மற்றும் ஏனைய கூட்டுறவு விடயங்கள் இந்த ஒப்பந்தங்களில் அடங்குகின்றன.
சீனாவின் வடமேற்குப் பிராந்தியத்திற்கும் பாகிஸ்தானின் கவாதார் துறைமுகத்துக்கும் இடையே கப்பல் பாதையொன்றை அமைப்பதற்கும் உடன்படிக்கை கைச்சாத்தாகியுள்ளது.
அரபிக் கடலில் சுமார் 2000 கிலோமீட்டர் தூரத்திற்கு அமையவுள்ள இந்தப் பாதை இருநாட்டுக்கும் இடையிலான நீண்டகாலத் திட்டமாக இருந்துவருகிறது.
கப்பல் போக்குவரத்துக்கு செலவாகும் காலநேரத்தை சுருக்கவும் சீனாவுக்கு ஹோர்முஸ் நீரிணைக்குச் செல்ல நேரடி வழியை ஏற்படுத்தவும் இந்தப் பதை வழிவகுக்கும்.
ஹோர்முஸ் நீரிணைப் பகுதி உலக எண்ணெய்க் கப்பல்களுக்கு முக்கியமான வழியாக இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. -BBC