வடமாகாணத் தேர்தலில் ததேகூ போட்டியிடும்- பிரேமச்சந்திரன்

eelam08713aஇலங்கையின் வட மாகாண தேர்தலுக்குரிய வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான திகதி மற்றும் தேர்தல் நடைபெறும் திகதி என்பன அறிவிக்கப்படவுள்ள நிலையில், அந்தத் தேர்தல் நடைபெறுமா என்பது குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஐயப்பாட்டை வெளியிட்டிருக்கின்றது.

எனினும், அவ்வாறு அந்தத் தேர்தல் நடத்தப்படுமேயானால், அது நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூட்டமைப்பு கோரியிருக்கின்றது. தேர்தல் ஆணையாளருடனான ஒரு சந்திப்பின்போது இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

இராணுவத்தினரை முகாம்களுக்குள் வைத்திருப்பதுடன், வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முக்கியமாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன என்று இந்தச் சந்திப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

”பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் அதன் கீழ் வருகின்ற மாகாண சபைகளுக்கான முக்கிய அதிகாரங்களை இல்லாமல் செய்ய வேண்டும் என்று அரசாங்கம் முனைப்பாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. சிங்களத் தீவிரவாத அரசியலமைப்புக்கள் வடமாகாண தேர்தலை நடத்தக் கூடாது என்று குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் வடமாகாணசபைக்கான தேர்தலை அரசாங்கம் நடத்துமா என்பது குறித்து ஐயப்பாடுகள் எழுந்துள்ள போதிலும், நாட்டின் ஏனைய பகுதிகளில் நடைபெறுவதைப்போன்று வடக்கிலும் மாகாண சபைக்கான ஒரு தேர்தல் நடைபெறும்போது, அரசியல் கட்சி என்ற ரீதியில் ஜனநாயக முறைப்படி கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது.

அத்துடன் மாகாண சபை என்பது இனப்பிரச்சினைக்கான தீர்வல்ல என்ற நிலைப்பாட்டில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தெளிவாக இருக்கின்றது. ஆயினும் வருகின்ற மாகாண சபையின் மூலம் மக்களுக்கு ஆற்றக் கூடிய சேவைகளைச் செய்ய வேண்டும் என்பதற்காகவும் இந்தத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு போட்டியிடவுள்ளது” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறினார்.

மாகாணசபைகளை மையப்படுத்தி அரசியலமைப்பில் மாற்றங்களைக்கொண்டு வருவதற்காக அரசாங்கம் பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமித்திருக்கின்றது. வடமாகாணசபை தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என்ற எதிர்பார்ப்பும் பரவலாக இருக்கின்றது. இந்தியாவும் மாகாண ஆட்சி முறையில் மாற்றங்களைச் செய்யக் கூடாது என்ற வகையில் குரல் கொடுத்திருக்கின்றது. -BBC

TAGS: