கனடா கொமன்வெல்த் மாநாட்டை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும்!

eelam09713bஇலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டுக்கு கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்ப்பர் செல்லாமல் அங்கு அரச தூதுக் குழுவை மட்டும் அனுப்பும் தீர்மானம் நாட்டின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டுக்கு முரணானது என்று கனடாவின் எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி கூறியுள்ளது.

இலங்கையில் நடக்கும் மாநாட்டை கனடா ஒட்டுமொத்தமாக புறக்கணித்தால் மட்டுமே மற்றைய நாடுகளும் கனடாவைப் பின்பற்றும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் தெரிவித்தார்.

உலகளாவிய ரீதியில் இலங்கையிலிருந்து அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து வாழும் நாடுகளில் கனடா முதலிடம் வகிக்கின்றது. இலங்கையில் தற்போதும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என நாங்கள் அறிகின்றோம்.

ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் வரை கனடா இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

கனடா எப்பொழுதும் மனித உரிமைகள் விடயத்தில் மிகவும் முன்னணியில் திகழும் நாடு என்பதால் கனடா இலங்கை விடயத்திலும் அதை பின்பற்றி இலங்கை மாநாட்டை புறக்கணித்தால், மற்றைய உலக நாடுகளும் இதை முன்மாதிரியாக வைத்து புறக்கணிக்கும் என நாம் நம்புகின்றோம்.

தற்போது நாம் கனடிய அரசாங்கத்தை கோருவது போல அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் வாழ்கின்ற எமது மக்களும் அந்தந்த நாடுகளிடம் இலங்கையில் நடைபெறுகின்ற பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பற்கேற்க கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.

இலங்கை இதுவரை ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைவாக அதை ஏற்றுக்கொண்டு அதில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டையே  பிரித்தானியாவில் நடைபெற்ற பொதுநலவாய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட கனடா உட்பட்ட அனைத்து நாட்டுத் தலைவர்களும்  முன்வைத்திருந்தனர்.

எனவே இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் மாநாட்டை கனடா முற்றுமுழுதாக புறக்கணித்து மற்றைய நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்றார் ராதிகா சிற்சபேசன்.

TAGS: