உலகில் நான்கில் ஒருவர் கடந்த ஆண்டு லஞ்சம் கொடுக்க வேண்டி வந்துள்ளது என்று உலக அளவில் நடத்தப்பட்டுள்ள புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது.
ஜெர்மனியின் பெர்லின் நகரில் தலைமையகத்தைக் கொண்டுள்ள டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் இந்த ஆய்வை நடத்தியிருக்கிறது.
உலகில் லஞ்ச சூழ்நிலை மோசமடைந்துவருவதாக பரவலான கருத்து நிலவுவதாகவும் இந்த சுற்றாய்வு கண்டறிந்துள்ளது.
செல்வந்த நாடுகளில் ஒருவர் லஞ்சம் கொடுக்கவேண்டி வருகின்ற தருணங்களைப்போல இரண்டு மடங்கு அதிகமான தருணங்களில் ஏழை நாடுகளில் ஒருவர் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது என இந்த ஆய்வு காட்டுகிறது.
107 நாடுகளிலிருந்து 1 லட்சத்து 14 ஆயிரம் பேரிடம் சுற்றாய்வை நடத்தி இந்த ஆய்வின் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு உலக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதன் பின்னர் உலக அளவில் ஊழல் அதிகரித்துள்ளது என்றும் உழலுக்கு எதிராக அதிகாரிகள் எடுத்துவரும் நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன என்றுமான பார்வை மக்களிடம் பரவலாகத் தென்படுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.
எந்தெந்த துறையினர் ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கிறார்கள் என்பது பற்றி இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது என டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனலைச் சேர்ந்த கோபஸ் த ஷ்வார்ட் பிபிசியிடம் விளக்கினார்.
“நாங்கள் இந்த சுற்றாய்வை நடத்தியதில் பாதியளவான நாடுகளில் அந்தந்த நாடுகளின் அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும்தான் லஞ்ச ஊழலின் ஊற்றாக இருக்கிறார்கள் என்று அந்தந்த நாடுகளின் மக்கள் கருதுகின்றனர். இரண்டாவதாக பொலிசார் ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறார்கள் என சுற்றாய்வில் பங்குகொண்ட நாடுகளில் முப்பது சதவீதமான நாடுகளில் மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இருபது சதவீதமானவர்கள் ஆம் என்று சொல்ல மூன்றாவது இடத்தில் நீதித்துறை ஊழல் மிகுந்த கட்டமைப்பாக வந்துள்ளது.”
இந்தியாவில் 86 சதவீதம் பேரும், இலங்கையில் 51 சதவீதம் பேரும் அரசியல்வாதிகளை ஊழல் நிறைந்தவர்களாகப் பார்க்கின்றனர் என இந்த ஆய்வு காட்டுகிறது.
கடந்த ஓராண்டில் பொலிசாருக்கு தாங்கள் லஞ்சம் கொடுக்க வேண்டி வந்ததாக இந்தியாவில் 62 சதவீதத்தினரும் இலங்கையில் 43 சதவீதத்தினரும் தெரிவித்துள்ளனர் என்று இந்த ஆய்வறிக்கை சொல்கிறது. -BBC