13 வது அரசியல் அமைப்பை மாற்றியமைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையினர் தயாராகி வருகின்ற போதும், தாம் 13 இல் மாற்றங்கள் கூடாது என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பின் ஊடகம் ஒன்றுக்கு தகவல் வழங்கியுள்ள அவர், 13வது அரசியல் அமைப்பு இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வாக இல்லாத போதும் தற்போதுள்ள தீர்வுகளில் அது சிறந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆசியாவில் இலங்கையை ஆச்சரியம் மிக்க நாடாக கொண்டு வரவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விரும்புகிறார். அப்படியாயின் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியமானது என்று ராஜித குறிப்பிட்டுள்ளார்.
தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் இன்று நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. எனினும் ஏற்கனவே அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையிலான நாடாளுமன்ற தெரிவுக்குழு இனப் பிரச்சினைக்கான தமது தீர்வை முன்வைத்துள்ளது என்பதை அமைச்சர் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் போது அதிகாரப் பரவலாலக்கம் அவசியமானது. அது காலத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
1956 ஆம் ஆண்டிலும் சிங்கள மொழியை அரச மொழியாக பிரகனப்படுத்தியபோது இன்றைய நிலை தோன்றியிருந்தது. எனினும் அந்த தவறை தமது தந்தையான எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க செய்தமைக்காக அவருடைய மகள் சந்திரிக்கா பதவிக்கு வந்தபோது 2000 ஆம் ஆண்டில் அதிகாரப் பரவாலக்கத்துடன் கூடிய தீர்வுப் பொதியை முன்வைக்க வேண்டியிருந்தது என்றும் ராஜித சுட்டிக்காட்டியுள்ளார்.