கடந்த 20ம் திகதி, இலங்கை மற்றும் இந்தியாவுக்கான கிரிகெட் போட்டி காடிஃப் நகரில் நடைபெற்றது. இதன்போது ஏராளமான தமிழர்கள் ஒன்று திரண்டு இலங்கை கிரிகெட் அணிக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தார்கள்.
இதில் சில கை கலப்புகள் ஏற்ப்பட்டதும் யாவரும் அறிந்ததே. இதேவேளை மைதானத்தில் தமிழீழ தேசிய கொடியோடு ஓடிய, மணி என்பவரை வேல்ஸ் பொலிசார் கைதுசெய்து பின்னர் பிணையில் விட்டார்கள். அவரது வழக்கு நேற்றைய தினம் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அவர் செயல்பட்டார் என்பதே அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகும். நீதிபதி பிரவுன் அவர்கள், நீங்கள் ஏன் கொடியோடு மைதானத்தினுள் ஓடினீர்கள் என்று கேள்வி எழுப்பினார் !
அதற்கு பதிலளித்த மணி, தனது அப்பாவை இலங்கை இராணுவம் கொன்றது. எனவே இலங்கையை பகிஷ்கரிக்கவே நான் அவ்வாறு செய்தேன் என்றார். இதனை ஏற்றுக்கொள்ளாத நீதிபது அதற்கும் கொடியோடு மைதானத்தினுள் சென்றதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று வினவினார்.
தான் அமைதியாக மைதானத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டவேளை, அந்த வழியாக வந்த சிங்களவர் ஒருவர் தன்னைப் பார்த்து, நீ இலங்கை வரமுடியாது வந்தால் உன்னை கொன்றுவிடுவார்கள் என்று கூறினார்.
பிரித்தானியா ஒரு பாரிய ஜனநாயக நாடு, இன் நாட்டில் வைத்து அப்படி சிங்களவர் பேசக்கூடாது. அதனை உணர்த்தவே நான் மைதானத்தில் கொடியுடன் ஓடினேன் என்றார் மணி. இதற்கு மேலும் நீதிபதியால் பேசமுடியுமா ?
அதனை ஏற்றுக்கொண்ட அவர், 250 பவுண்டுகள் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார். மணியோடு சேர்த்து சுமார் 6 பேர் கைதாகி பிணையில் விடுதலையாகியுள்ளார்கள். றேகன் சாள்ஸ், சுகிதர்ஷன், திலக்ஷன், கனுஷாந்த், சிவந்தரன், மற்றும் தயாளன் ஆகியோர் வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளது.
இதில் பெரும் சிக்கலும் இருக்கிறது. காரணம் என்னவென்றால் … சம்பவதினமன்று மைதானத்துக்கு வந்த சிங்களவர்கள், தமிழர்களைப் பார்த்து கெட்ட வார்த்தையால் திட்டினார்கள். பதிலுக்கு தமிழ் இளைஞர்களும் திட்டினார்கள். அதன்போது சில தமிழ் இளைஞர்கள் கைதாகியுள்ளார்கள்.
ஆனால் அங்கே பொலிசாருடன் நின்றிருந்த மொழிபெயர்ப்பாளருக்கு , அந்த வார்த்தைகள் சரியாக விளங்கவில்லையாம். இதனால் அது கெட்ட வார்த்தையா ? சாதியைக் குறிக்கும் வார்த்தையா என்று தெரியவில்லை என்று அவர் கூறியுள்ளார். (மொத்தத்தில் தனக்கு சரியாக விளங்கவில்லை) என்று அவர் கூறியுள்ளார்). இதனால் பலரது வழக்குகள் தள்ளுபடியாகும் நிலையும் தோன்றலாம்.