கே.பியை ஒப்படைக்குமாறு இந்தியா கோருவது மறைமுக அச்சுறுத்தல்: ஜாதிக ஹெல உறுமய

KPராஜீவ் காந்தி கொலை தொடர்பாக கே.பி.யை ஒப்படைக்குமாறு இந்தியா கோருமானால் தமிழ் நாட்டில் இலங்கைக்கு எதிராக செயற்படும் விடுதலைப் புலி உறுப்பினர்களையும் இலங்கையிடம் ஒப்படைக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

இலங்கை நாட்டின் இறையாண்மையை பறிப்பதற்கு இந்தியாவுக்கோ, சிவ்சங்கர் மேனனுக்கோ இடமளிக்க முடியாது என அதன் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்க தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

13வது திருத்தம் தொடர்பில் இந்தியா தனது நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் மீது திணிப்பது எமது நாட்டின் இறையாண்மையை பறிப்பதற்கு எடுக்கும் பலாத்காரமான அரசியல் மீறல் செயற்பாடாகும்.

இதனை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். இதற்கு ஒரு போதும் நாம் இடமளிக்கமாட்டோம்.

13வது திருத்தத்தில் திருத்தத்தை மேற்கொள்வது அரசியலமைப்பை மாற்றுவது என்ற விடயங்களை நாமே தீர்மானிக்க வேண்டுமே தவிர, இந்தியா அல்ல. எனவே, எமது நாட்டுப் பிரச்சினையில் இந்தியா தலையிடுவது அரசியல் நாகரீகமற்ற செயலாகும்.

4 வருடங்களுக்கு பின்னர், ராஜீவ் காந்தி கொலை விசாரணைக்காக இந்தியாவுக்கு புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் கே. பி. தேவைப்பட்டுள்ளார்.

விசாரணைக்காக கே. பி.யை ஒப்படைப்பதில் எதுவித ஆட்சேபனையும் இல்லை. அப்படியானால், இலங்கைக்கு எதிராக தமிழ் நாட்டில் செயற்படும் விடுதலைப் புலி உறுப்பினர்களையும் இந்தியா இலங்கையிடம் ஒப்படைக்க வேண்டும்.

கே.பி.யை கோருவது இந்தியாவின் மறைமுகமான இராஜதந்திர ரீதியிலான அச்சுறுத்தல் என தெரிவித்தார்.

TAGS: