இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரி மைக்கல் ஏர்வின் தலைமையிலான குழுவினர் சமகால நிலைமைகளை ஆய்வு செய்ய முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
இவ்விஜயத்தின் போது, முல்லை. மாவட்ட பிரஜைகள் குழுவின் காப்பாளர்களான மனித உரிமை ஆர்வலர் சண் மாஸ்டர், அருள்பணி ஜோய் பெர்ணான்டோ, தலைவர் ரவிகரன் தலைமையிலான பிரஜைகள் குழுவினருடன் இன்று காலை 9.00 மணிக்கு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
சந்திப்பின் போது, யுத்தத்துக்குப் பின்னரான முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் பிரஜைகள் குழுவினர் புள்ளிவிவரங்களுடன் விரிவாக எடுத்துக் கூறினர்.
பரம்பரை வழித் தோன்றலாக பேணப்பட்டு வந்த எமது பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன. வாரி அள்ளித்தந்த எமது கடல் வளம் தென்னிலங்கையிலிருந்து கொண்டு வந்து இறக்கி விடப்பட்டுள்ள மீனவர்களால் சுரண்டப்படுகின்றது. தடை செய்யப்பட்டுள்ள மீன்பிடி உத்திகள் மற்றும் உபகரணங்களைக் கொண்டு கடல் தொழிலில் அவர்கள் ஈடுபடுவதை யாரும் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. தடுப்பதற்கும் உரிய அதிகாரிகள் நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை.
சீனா போன்ற பெரும் வல்லரசு நாடுகளின் நிதி நிறுவனங்கள் எங்கள் கடலை குத்தகைக்கு எடுத்துவிட்டன. “மீன் வங்கி” என்று காலம் காலமாக புகழ்ந்து பேசப்பட்டுவந்த முல்லைத்தீவு கடலில் இன்று மீன்களையே காண முடியவில்லை.
எமது நிலம் அபகரிக்கப்படுவதையும், எமது கடல் வளம் ஆக்கிரமிக்கப்படுவதையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இவற்றுக்கு எதிராக மக்களை ஒன்றுகூட்டி மிகத் தீவிரமாக ஜனநாயக போராட்டங்களை தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுவினராகிய நாங்கள் நடத்துவதாக தீர்மானித்துள்ளோம்.
சிறுபான்மை சமுகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படும் ஒடுக்கு முறைகள், வன்முறைகளுக்கு எதிராக பிரஜைகள் குழு உளத்தூய்மையுடனும், அர்ப்பணிப்புடனும் பணி செய்ய தயாராகவிருக்கின்றது.
எனவே பிரஜைகள் குழுவின் உருவாக்கத்துக்கு காரணமானவர்களுக்கும், குழுவில் அங்கத்துவம் வகிக்கும் நபர்களின் சுதந்திரமான செயல்பாடுகளுக்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை பிற சர்வதேச நாடுகளுடன் இணைந்து தடுப்பதோடு, எங்களின் பாதுகாப்புக்கு முழுமையான உத்தரவாதத்தையும் வழங்க அமெரிக்கா முன்வர வேண்டும்.
இதேவேளை தமிழ் மக்கள் காலம் காலமாக வாழ்ந்து வந்த தமது பூர்வீக நிலபுலங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் முறையற்ற குடியேற்றங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
பாரியளவில் காடுகள் சட்டவிரோதமாக அழிக்கப்பட்டு உடனடியாகவே உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு இந்த குடியேற்றங்களும், நில ஒதுக்கீடுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசாங்கத்தின் இத்தகைய பாகுபாடான குடியேற்ற கொள்கைகளால் தமிழர்கள் நாளாந்தம் பாதிக்கப்படுகின்றனர்.
மணலாறு பிரதேசம் தமிழர்களின் பூர்வீக நிலமாகும். பரம்பரை வழித்தோன்றலாக தமிழர்கள் தமது பூர்வீக நிலபுலங்களில் உழுது, உண்டு, உழைத்து, மகிழ்ந்து வாழ்ந்திருந்த மணலாறு பிரதேசம், 2011ம் வருடம் அநுராதபுரம் மாவட்டத்துக்குட்பட்ட 9 சிங்கள கிராமங்களை ஒருங்கிணைத்து, வெலிஓயா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு தனிச் சிங்களப் பிரதேச செயலாளர் பிரிவாக்கப்பட்டுள்ளது.
இதனால் எமது மக்களின் 2590 ஏக்கர் விவசாய விளைநிலங்கள் (நெற்செய்கை காணிகள்) மணலாறு பகுதிக்குள் அகப்பட்டுள்ளன. இதுவொரு திட்டமிட்ட நில அபகரிப்பாகும். இந்த மக்கள் நெற்செய்கையை தமது வாழ்வாதாரத் தொழிலாக மேற்கொண்டு வந்துள்ளார்கள். விவசாய செய்கையே இந்த மக்களின் வாழ்வின் சாரமும், வாழ்வின் ஆதாரமுமாகும். இன்று இந்த மக்கள் வீடு காணிகளை இழந்து வீதிக்கு விரட்டப்பட்டுள்ளனர்.
தமிழர்கள் வாழும் பகுதிகளில் யுத்தத்துக்குப் பின்னர் அரச உயர் பதவிகளில் பெரும்பான்மையினத்தவரை நியமித்து, அரசு தனது கொள்கைகளை தமிழர்கள் மீது திணிப்பதோடு, தமிழ் மக்களின் இருப்பை குழைக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது.
இது மொழி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளதோடு, தமிழ் இனத்தின் தனித்துவமான கலை, கலாசார பண்பியல்புகளை சிதைக்கும் செயலாகவும், இன ஐக்கியத்துக்கும், நல்லிணக்கத்துக்கும் ஊறுவிளைவிக்கும் செயலாகவும் உள்ளது.
வெலிஓயா பிரதேச செயலாளராக கடமையாற்றிக் கொண்டிருந்த பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவரை கரைத்துறைப்பற்று பிரதேச செயலராக நியமித்துள்ளமையை தமிழர்களின் எஞ்சியுள்ள நிலங்களையும் துண்டாடும் நில அபகரிப்பின் ஒரு நிகழ்;ச்சி நிரலாகவே பார்க்க வேண்டியுள்ளது.
கரைத்துறைப்பற்று பிரதேச தமிழ் எல்லைக்கிராமங்கள் பலவும் வெலிஓயா தனிச்சிங்கள பிரதேச செயலர் பிரிவுக்குள் முழுமையாக அகப்பட்டு தமிழர்களுக்கு காணிகள் இல்லாமல் போகச் செய்யும் அபாயத்துக்கு இந்த நியமனம் வழிவகுக்கின்றது.
எமது நிலம் எமக்கு வேண்டும். எமது நிலங்களை மீட்க நாம் நடத்துகின்ற போராட்டங்களின் தன்மையை அறிந்து, எமது வலியை உணர்ந்து சர்வதேச நாடுகள் உதவ முன்வர வேண்டுமென பிரஜைகள் குழுவினர் மைக்கல்ஏர்வின் குழுவினரிடம் வலியுறுத்தியுள்ளனர்.