தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். ஆனால், பிரான்ஸ் தமிழர்கள் மத்தியில் ஆடியிலும் ஒரு வழி பிறந்துள்ளது.
தமிழ் மக்கள் மத்தியில் பலத்த விமர்சனங்களுக்கும், கண்டனங்களுக்கும் உள்ளாகியிருந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இப்படி ஒரு முடிவை அறிவிக்கும் என்று யாரும் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நடத்தையும், செயற்பாடுகளும் அந்த அளவிற்கு தமிழ் மக்களின் மனதை நோகடித்திருந்தது.
பிரான்சைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகளது அசையாச் சொத்துக்கள் பலவும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பிலேயே விடப்பட்டிருந்தது. விடுதலைப் புலிகள் மேற்குலகில் எதிர்கொண்ட சட்டச் சிக்கல்கள், தடைகள் போன்ற காரணங்களால் விடுதலைக்கான பலமாக உருவாக்கப்பட்ட பாரிஸ் லா சப்பல் அம்மன் கோவில், சிப்பி மண்டபம் உட்பட்ட பல சொத்துக்களும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பெயரிலேயே பதியப்பட்டது. முள்ளிவாய்க்கால்வரை தமிழ்த் தேசிய செயற்திட்டங்களுக்காகவே அதன் வருமானங்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் நிலமை முற்றாக மாற்றம் அடைந்து, தமிழ்த் தேசிய வளங்கள் பலவும் அதன் பராமரிப்பாளர்களினாலேயே தீர்மானிக்கும் நிலையை அடைந்தது. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தவறான திசையில் பயணிக்க முற்பட்டதோடல்லாமல், தமிழ்த் தேசிய உடமைகளின் வருமானங்களையும் தவறாகக் கையாள முற்பட்டது. இது தமிழ் மக்கள் மனங்களை மிகவும் நோகடித்த காரணத்தால், மக்கள் மத்தியிலிருந்து பலத்த விமர்சனங்களும் வெளிப்பட ஆரம்பித்தன.
இந்த வருடத்திற்கான தமிழர் விளையாட்டுப் போட்டியினையும் தெரிந்தோ, தெரியாமலோ கரும்புலிகள் தினத்தை அண்டிய ஜூலை 07 இல் நடாத்த முற்பட்டது தமிழ் மக்கள் மத்தியில் இன்னமும் பலத்த அதிருப்தியைத் தோற்றுவித்திருந்தது. இது குறித்து, பலரும் ஊடகங்கள் ஊடாகக் கண்டனங்களையும் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், தமிழர் விளையாட்டு விழா முடிந்த கையோடு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் விடுத்த அறிவித்தல் ஒன்று தமிழ் இதயங்களில் பால் வார்ப்பது போன்று அமைந்தது. நடைபெற்று முடிந்த தமிழர் விளையாட்டு விழா மூலம் திரட்டப்பட்ட 83,279 ஈரோக்கள் பணத்தையும் மன்னார் ஆயர் அவர்களூடாக வன்னியில் அவலத்திற்குள்ளான குடும்பங்களின் மீள் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்போவதாக அறிவித்திருந்தது. அத்துடன், பாரிஸ் முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருமானத்தை வன்னிச் சிறார்களது கல்வி ஊக்குவிப்பிற்காகப் பயன்படுத்தப் போவதாகவும் தெரிவித்திருந்தது.
உண்மையிலே, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் இந்த முடிவு அவர்களது பெரும் மனமாற்றத்தையே வெளிப்படுத்துகின்றது. தேசியத் தலைவர் அவர்கள் எதற்காக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை உருவாக்கினாரோ, அதை நோக்கி மீண்டும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பயணிக்க முற்படுவது அடைக்கப்பட்ட பாதை ஒன்று மீளத் திறக்கப்பட்டதைப் போன்ற உணர்வைத் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் இந்த முடிவு செயலாக்கம் பெறவேண்டும். அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் தேவைப்படுகின்றது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் உதவிகள் தமிழீழ மக்களைச் சரியாகச் சென்றடைகின்றதா? என்ற சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டு, இந்த உதவிகள் அனைத்தும் மன்னார் ஆயர் ஊடாகவே மேற்கொள்ளப்படவுள்ளதாக தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் தலைவர் உறுதியளித்துள்ளார்.
உண்மையாகவே, தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தமிழீழ மக்களது துயர் களைவுக்காக மீண்டும் பணியாற்ற முன்வரும் இந்தத் தருணத்தை நல்ல ஆரம்பமாகக் கொண்டு, தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் முன்பு போலவே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தோடு இணைந்து செயலாற்ற முன்வர வேண்டும்.
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தத் தருணங்களை தமிழீழ மக்கள் மட்டுமல்ல, அவர்களது விடியலுக்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களும் மலர் தூவி வாழ்த்துவார்கள்.
– அகத்தியன்
வாழ்க தமிழீழம். வாழ்க தமிழீழம். வாழ்க தமிழீழம். வாழ்க தமிழீழம்.
தமிழில மக்கள் வாழ்வில் இது ஒரு மறுமலர்சி..தமிழில மக்கள் என்றும் சிருபுடன் வாழ எங்களின் வாழ்துக்கள்..இறைவன் என்றும் நம்பியவரை கைவிட்டதல.. பா.க.