இவ்வளவு காலங்களும் தமிழர்கள் சிந்திய இரத்தங்கள், கண்ணீர்கள், ஏற்பட்ட சொத்து அழிவுகள் போன்ற சொல்லொணாத் துன்பங்கள் வட மாகாண சபை ஆட்சி முறைக்காக அல்ல மாறாக எங்களுடைய அரசியல் அபிலாசைகளை நாங்களே தீர்மனிப்பதற்காகத் தான் என்பதை தமிழர்கள் தங்கள் மனங்களில் வைத்திருக்க வேண்டும்.
வடமாகாண சபை என்கின்ற ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் தமிழர்களுடைய சுயநிர்ணய உரிமைப் பிரச்சனைக்கு தீர்வு வழங்கப்படுவது போல சர்வதேசத்தினுடைய அழுத்தங்களுக்கு காட்ட அரசாங்கம் முற்படுகின்றது. இதை தமிழர்களாகிய நாங்கள் நன்கு தெளிவக புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களுடைய பொருளாதர அடிப்படை தேவைகளை வைத்துக்கொண்டு அபிவிருத்தி என்ற போர்வையில் அவர்களுடைய அடிப்படை பிரச்சினையாகிய சுயநிர்ணய உரிமையை மூடி மறைக்கும் செயற்பாடுகளில் இன்று திட்டமிட்டு இறங்கியுள்ளனர்.
உண்மையிலே இங்கு அபிவிருத்தி என்பது பேச்சளவில் மட்டும்தான் நடைபெறுகின்றது. இத்தகைய செயற்பாடுகள் வட மாகாண சபைக்கான தேர்தல் பற்றிய அரசாங்க அறிவிப்புக்களை அடுத்தே நடைபெறுகின்றது. ஆகவே இது அவற்றை மையப்படுத்தியதாக கூட அமையலாம். இது ஒரு மக்களை திட்டமிட்டு ஏமாற்றுகின்ற செயலாகும்.
இத்தகைய மாகாண சபை ஆட்சி முறமை கொண்ட அதிகாரங்கள் இலங்கையில் உள்ள எல்லா மாகாணங்களுக்கும் உரிய ஒன்று. இது ஒரு போதும் தமிழர்களாகிய எங்களுடைய அடிப்படைப் பிரச்சினையை தீர்க்கப் போவதில்லை.
இருந்தும் இன்றைய கால ஒழுங்குக்கும், சர்வதேசத்தினுடைய தமிழர் தொடர்பான பிரச்சினைகளுடைய பார்வையும் அவ்ர்களின் ஆலோசனைகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இந்த தேர்தல் நடைபெற்றால் அதில் பங்கு பற்ற வேண்டிய தேவையை உணர்த்தியுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தொடர்ச்சியான கிராம யாத்திரையின் ஒரு அங்கமாக அண்மையில் கிளிநொச்சி பிரதேசத்திற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் நடைபெற்ற போது கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணியின் தலைவர் சு.சுரேன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் இங்கு இருக்கும் எங்களுடைய மாணவர்கள் கல்வியில் சர்வதேசதரத்திற்கு உயர்வடைவதோடு மட்டும் நின்று விடாமல் எங்களுடைய உரிமகளை ஜனநாயக ரீதியில் வென்றெடுக்கக் கூடிய செயற்பாடுகள் பற்றியும் சிந்திக்க வேண்டும். ஒரு இனத்தின் மிகப் பெரிய ஆயுதம் கல்வியாகும் அதை பயன்படுத்தி எங்களுடைய இனத்தின் விடிவை இந்த உலகமே வியக்கின்ற அளவில் நாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். அதுவே எம்முடைய சந்ததியினருக்கு நாம் செய்ய வேண்டிய கடமையாகும்.
இக் கிராம யாத்திரையில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவ்ர்களுடைய ஏற்பாட்டில் சுவிஸ்ர்லாந்து நாட்டில் உள்ள லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயத்தினரால் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இம் மக்கள் சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சேதுபதி, கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணியின் தலைவ்ர் சுரேன், கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணியின் செயலளர் கு. சர்வானந்தா, கட்சியின் செயற்பாட்டு உருப்பினரன ஜெயக்குமார், கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர், செயலளர், மற்றும் பெருமளவான மக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.