இலங்கையின் வடக்கே தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அவற்றை வழங்குவதற்கென துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத் குமார தெரிவித்தார்.
இதற்கென வடமாகாண மாவட்டங்களில் நடமாடும் சேவைகள் ஏற்கனவே நடத்தப்பட்டு வருகின்றன.அத்துடன் ஆட்பதிவுத் திணைக்களத்தின் பணிகளை பரவலாக்கும் வகையில், ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் இலங்கையிலேயே முதலாவதாக வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது என்றும், இதேபோன்று போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கின்ற கிழக்கு மாகாணத்திலும் பிராந்திய அலுவலகம் ஒன்றைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தலை இலக்கு வைத்து தமது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை எனத் தெரிவித்த சரத் குமார, வடக்கில் 85 ஆயிரம் அல்ல ஒரு லட்சம் பேர் என்றாலும், அவர்களுக்கான தேசிய அடையாள அட்டையை வழங்குவதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் தயாராக இருப்பதாகக் கூறினார்.
தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அதனைத் துரிதமாக வழங்கும் நடவடிக்கையின் ஓர் அங்கமாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், முக்கிய அதிகாரிகள் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட சிவில் சமூகத்தினருக்கு அறிவூட்டல் தொடர்பான முக்கிய கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத் குமார வவுனியாவுக்கு வருகை தந்திருந்தார். அங்கு அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது பல தகவல்களை அவர் வெளியிட்டார்.
வடமாகாணத்தில் மாத்திரம் 85 ஆயிரம் பேரிடம் தேசிய அடையாள அட்டை இல்லாதிருப்பது அதிகாரிகளினால் கண்டறியப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக வடபகுதியில் பல்லாயிரக்கணக்கானோர் தேசிய அடையாள அட்டை இல்லாமலிருப்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்குரிய விண்ணப்பங்கள் அடையாள அட்டை தேவைப்படுவோரிடமிருந்து ஒப்பீட்டளவில் அதிகமாக வருவதில்லை என தெரிவித்த சரத் குமார, அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் முதலில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதனைச் செய்தால் அடையாள அட்டையை வழங்குவதற்கு தமது திணைக்கள அதிகரிகள் தயாராக இருக்கின்றார்கள் என தெரிவித்தார்.
நாடாளவிய ரீதியில் சுமார் நான்கு லட்சம் மாணவர்கள் தேசிய அடையாள அட்டை பெறுவதற்குரிய வயதை எடடியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள இந்த மாணவர்களின் விண்ணப்பங்களைக் கடந்த மாதம் முடிவதற்கிடையில் அனுப்பி வைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், சுமார் 50 வீதமான விண்ணப்பங்களே வந்து கிடைத்திருக்கின்றன என்றும் ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சரத் குமார கூறினார்.
வரும் 2014 ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கையில் சகலரும் தேசிய அடையாள அட்டையைப் பெற்றிருக்கத்தக்க வகையில் திட்டமிடப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதேநேரம் தற்போது நடைமுறையில் காகிதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக எலக்ரோனிக் அடையாள அட்டையை வழங்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் ஆட்பதிவுத் திணைக்களம் ஈடுபட்டிருப்பதாகவும் ஆணையாளர் நாயகம் சரத் குமார கூறினார்.