வடமாகாண தேர்தலில் ராணுவம் முகாம்களுக்குள் இருக்கவேண்டும்

eelam13713aசெப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் இலங்கையின் வடமாகாணசபைத் தேர்தலின்போது அந்த பிராந்தியத்தில் இருக்கும் இலங்கை ராணுவத்தினரின் பிரசன்னம் முற்றுமுழுதாக இருக்கக் கூடாது என்றும் ராணுவத்தினர் அனைவரும் அவர்களின் முகாம்களுக்குள் சென்றுவிடவேண்டும் என்றும் இலங்கை ஜனாதிபதியிடம் தாம் கோரியதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே தாம் வெள்ளியன்று காலை அவரை சந்தித்துப் பேசியதாக தெரிவித்த சம்பந்தர், இலங்கையின் தேசியப் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் தீர்க்கப்பட வேண்டியுள்ள சகல விவகாரங்களையும் தீர்த்துவைப்பதில் தனக்கு ஆர்வம் இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தம்மிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் வடமாகாண தேர்தல்கள் நியாயமாக நடத்தப்படவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் தாம் அவரிடம் பேசியதாகவும் சம்பந்தர் கூறினார்.

மேலும் பிரிபடாத- ஐக்கிய இலங்கைக்குள் ஏற்றுக்கொள்ளக்கூடியதும் சாத்தியப்படக்கூடியதுமான நீடித்து நிலைத்திருக்கக்கூடிய தீர்வுத்திட்டம் பற்றி ஆராய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் தயாராக இருப்பதாக தாம் மகிந்த ராஜபக்ஷவிடம் மீண்டும் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

இலங்கையின் தேசியப் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் தீர்க்கப்பட வேண்டியுள்ள சகல விவகாரங்களையும் தீர்த்துவைப்பதில் தனக்கு ஆர்வம் இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாகவும் சம்பந்தர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸும் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவும் உடனிருந்துள்ளனர். -BBC

TAGS: