இலங்கையில் திரைத்துறை உட்பட பல கலைத்துறைகளை இராணுவமயப்படுத்த அரசாங்கம் முயன்று வருகிறது என்று சுதந்திர ஊடக இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
அல்லையான்ஸ் ஃப்ரான்ஸேவும், பிரெஞ்சு தூதரகமும் இணைந்து சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் நடத்திய ஒரு திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்ட ஒரு படம் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தயாரிக்கப்பட்டு அந்தத் திருவிழாவில் காண்பிக்கப்பட்ட சிங்கள மொழித் திரைப்படமான ‘இகிலென மலுவோ’, (பறக்கும் மீன்) என்ற திரைப்படம் அரச தொலைக்காட்சி ஒன்றில் வெளியான விமர்சனங்கள் காரணமாக நிறுத்தப்பட்டது.
இந்தப் படம் இராணுவத்தினரை அதீத பாலியல் இச்சை கொண்டவர்களாக சித்தரிப்பதுடன், பெண்களையும் இழிவு படுத்துவதாக உள்ளது என்று கூறி குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
‘பறக்கும் மீன்’ திரைப்படம் ஒரு “சட்டவிரோதமான திரைப்படம்” என்று கூறியுள்ள அரச பேச்சாளர் அந்தப் படத்தில் அனுமதியில்லாமல் இராணுவச் சீருடைகள் காண்பிக்கட்டுள்ளன என்று கூறுகிறார்.
ஆனால் நாட்டில் திரைப்படங்களை தணிக்கை செய்து வெளியிட அரச கட்டமைப்பு இருக்கும் போது, இராணுவம் ஏன் இவ்விஷயங்களில் தலையிட வேண்டும் என சுதந்திர ஊடக இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தத் திரைப்ப்டவிழா நடைபெற்ற பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டப நிர்வாகிகளும், பறக்கும் மீன் திரைப்படம் தமது அரங்கில் காண்பிக்கப்பட்டதற்காக பொதுமக்களிடமும் இராணுவத்திடமும் மன்னிப்பு கோரியுள்ளது.
இப்படியான செயல்பாடுகள் இலங்கையில் கருத்துச் சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் எனவும் சுதந்திர ஊடக இயக்கத்தின் அறிக்கை கூறுகிறது.
இது தொடர்பில் அரசு நடத்தும் எந்த விசாரணைக்கு உதவி செய்யவும் படம் குறித்த விளகங்கள் மற்றும் தெளிவுபடுத்தல்களைச் செய்யவும் தாங்கள் தயாராகவுள்ளதாக ‘பறக்கும் மீன்’ படத்தை இயக்கிய சஞ்சீவ புஷ்பகுமார பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இப்படம் ஒரு நடுநிலையான படம் எனவும் அவர் வாதிடுகிறார்.
இதேவேளை இலங்கையில் இராணுவ பலத்தைக் கொண்டு கலை வெளிப்பாட்டை நசுக்க முயற்சிகள் நடப்பதாக திரைப்படத் தயாரிப்பாளர் தர்மசிரி பண்டாரநாயக்க கருத்து வெளியிட்டுள்ளார். -BBC