நவ்றுவில் தஞ்சக் கோரிக்கையாளர் கலகத்தை அதிகாரிகள் அடக்கினர்

worldnews21713aபசிஃபிக் தீவுத் தேசமான நவ்றுவில் ஆஸ்திரேலியா நடத்தும் தஞ்க் கோரிக்கையாளர் தடுப்பு முகாமில் கலவரம் வெடித்ததை அடுத்து அங்கு பொலிசார் தலையிட்டு ஒழுங்கை ஏற்படுத்தினர்.

வெள்ளிக்கிழமையன்று அம்முகாமின் கட்டிடங்கள் பலவற்றுக்கு தீ வைக்கப்பட்டதகாகவும், முகாமின் மருத்துவ மையம் அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தஞ்சக் கோரிக்கையாளர்கள் 150 பேர் இந்தக் கலவரத்தில் ஈடுபட்டதாக ஆஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகள் கூறுகின்றனர்.

படகில் ஆஸ்திரேலியாவுக்கு வர முற்படும் தஞ்சக் கோரிக்கையாளர்களைத் தடுப்பதற்கான கடுமையான புதிய நடவடிக்கைகள் பற்றி ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் அறிவித்த சில மணி நேரங்களில் இந்தக் கலவரம் ஆரம்பித்தது.

பெரும்பாலும் இரானியர்கள் அடங்கிய தஞ்சக் கோரிக்கையாளர்கள் கூட்டம் ஒன்று தடுப்பு முகாமில் இருந்து தப்பிக்க முயன்றபோது இந்த கலவரம் வெடித்தது.

கலவரம் ஆரம்பித்த இரண்டு மணி நேரத்தில் தடுப்புக் காவல் மையத்தின் கட்டுப்பாட்டை தஞ்சக் கோரிக்கையாளர்கள் கைப்பற்றினர் என பெயர் குறிப்பிட விரும்பாத காவல் பணி ஊழியர் ஒருவரை மேற்கோள்காட்டி ஆஸ்திரேலிய செய்தி நிறுவனமான ஏபிசி தகவல் வெளியிட்டுள்ளது.

சமயலறையில் பயன்படுத்தப்படும் கத்திகளை கையிலெடுத்துக்கொண்டு தஞ்சக்கோரிக்கையாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது நடந்த சண்டையில், தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள் குறைந்தது நான்கு பேரும், காவல் பணியாளர்கள் பலரும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

கலவரம் செய்யும் தஞ்சக் கோரிக்கையாளர்களை பொலிசார் அடக்க முயன்றபோது, இரும்புக் குழாய்களையும், வெட்டுக் கத்திகளையும் ஏந்தி வந்து உள்ளூர்வாசிகள் பலர் உதவியிருந்தனர்.

வன்முறையைக் கட்டுப்படுத்துவதில் அதிகாரிகளுக்கு உதவ பெருந்திரளான உள்ளூர் வாசிகள் வந்து குவிந்ததை அடுத்து நான்கு மணி நேரம் நடந்த கலவரம் முடிவுக்கு வந்தது என்று உள்ளூர் செய்திப் புகைப்பட கலைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அந்த இடத்தில் அமைதி நிலவுவதாகவும், கலகம் செய்யும் விதமாக தஞ்சக் கோரிக்கையாளர் எவரும் தற்போது இல்லை என்றும் ஆஸ்திரேலிய குடிவரவு கட்டுப்பாட்டுத் துறை தெரிவிக்கிறது.

தடுத்துவைக்கப்பட்டிருந்தவர் சிலர் கலவரத்தின்போது தப்பிக்க முயன்றிருந்தாலும் தற்போது அனைவரும் கணக்கில் வந்து விட்டார்கள் என்று குடிவரவுத்துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தஞ்சம் கோரி ஆஸ்திரேலியாவுக்கு படகில் வரும் எவரும் ஆஸ்திரேலியாவில் டியமர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர்கள் பப்புவா நியு கினீக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் பிரதமர் ரட் வெள்ளியன்று அறிவித்திருந்தார்.

ஆஸ்திரேலியாவில் குடியேறும் கனவுடன் ஆபத்துமிக்க கடல் பயணத்தை மேற்கொள்வதை மக்கள் நிறுத்த வேண்டும் என்பதற்காக இந்த முடிவை தான் அறிவிப்பதாக அவர் கூறியிருந்தார்.

ஆஸ்திரேலியாவில் பொதுத்தேர்தல் விரைவில் வரவுள்ள சூழ்நிலையில் அந்நாட்டின் தஞ்சக் கோரிக்கையாளர் கொள்கையை மாற்றியமைப்பது பற்றிய அறிவிப்புகளை அவர் செய்திருந்தார். -BBC