வடக்கில் விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டுள்ள தங்க நகைகள் மற்றும் பெருந்தொகைப் பணத்தை வடமாகாணத் தேர்தலுக்கு முன் கைப்பற்றி விடும் முயற்சியில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
வடக்கை மையமாகக் கொண்டு நடைபெற்ற இறுதிக் கட்ட போரின் போது விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து இடம்பெயர்ந்த மக்கள் கையளித்திருந்த நகைகள் மற்றும் பணம் என்பவற்றை பாதுகாப்பு கருதி விடுதலைப் புலிகள் இடத்துக்கிடம் புதைத்து வைத்திருந்தனர். இவற்றில் ஓரளவு நகைகள் மற்றும் பணம் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிளிநொச்சியின் ஒரு பகுதியில் பெருமளவான தங்கம் மற்றும் நகைகளை விடுதலைப் புலிகள் மறைத்து வைத்திருப்பதாக பிரான்சில் வாழும் தமிழர் ஒருவர், பாதுகாப்புத் தரப்பிற்கு தகவல் வழங்கியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் ஊடாக இந்த தகவல் இலங்கை அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் விடுதலைப்புலிகள் புதைத்து வைத்தவற்றில் இங்குதான் மிகக் கூடிய அளவில் பெருந்தொகையான தங்கம் மற்றும் பணம் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன் இந்த தங்கம் மற்றும் பணத்தை கண்டுபிடித்து மீட்டெடுக்கும் தீவிர முயற்சியில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இதற்கென அவரது பணிப்புரையின் பேரில் கனிமப் பொருட்கள் திணைக்களம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகம், இலங்கைச் சுங்கத்திணைக்களம் ஆகியவற்றில் இருக்கும் தங்கத்தைக் கண்டறியும் விசேட ஸ்கேனர் இயந்திரங்களைக் கொண்டு கிளிநொச்சிப் பகுதியில் தங்க வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பூமிக்கடியில் உள்ள தங்கத்தைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்து கொள்வதற்காககவே தற்போது பாதுகாப்புச் செயலாளர் ஆபிரிக்க நாடொன்றுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.