வடகிழக்கு மாகாணங்கள் தமிழர்களுக்கே சொந்தமானது!

eelam22713aவடகிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக நிலம் என்றவகையில் வடகிழக்கு மாகாணசபை உள்ளிட்ட அனைத்தையும் ஆட்சி செய்வதற்குறிய உரிமை தமிழர்களுக்கே உண்டு என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

“கிழக்கு மாகாணத்தை தமிழர்கள் ஒருபோதும் ஆட்சிசெய்ய முடியாது” என  ஆளும் கட்சியின் தமிழ் அரசியல்வாதி ஒருவர் கூறியுள்ள கருத்து தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துதெ ரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

இன்று கிழக்கு மாகாணத்தை தமிழர்கள் ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது என ஆளும் கட்சியின் தமிழ் அரசியல்வாதி ஒருவர் கூறியுள்ளது மிகவும் வேதனைப்பட வேண்டிய விடயமாகவுள்ளது.

குறிப்பாக இன்று முஸ்லிம் சமூகம் தங்களது அரசியல் வேறுபாடுகளை கடந்து தங்களது இனத்துக்காகவும், மதத்திற்காகவும் செயலாற்றிக் கொண்டிருக்கும் போது தமிழ் அரசியல்வாதிகள் மட்டும் தமிழர்களின் பூர்வீக நிலங்களை இன்னுமொரு சமூகம்தான் ஆட்சிசெய்யும் என்று கூறுவது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது.

உண்மையில் வடகிழக்கில் உள்ள அனைத்து இடங்களும் தமிழர்களின் வரலாற்று பூர்வீக  நிலங்கள் அதனை காப்பாற்றிக் கொள்வதற்காகவே இன்றுவரை தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த 60வது ஆண்டுகளுக்கு மேலாக ஆயுத வழியிலும்,அகிம்சை வழியிலும் போராடிய தமிழினம் இன்று இராஜதந்திர ரீதியான போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

உலகம் தமிழர்களின் போராட்டத்தை அங்கீகரித்துள்ளது, உலக நாடுகள் தமிழர்களின் பூர்வீக தாயக நிலம் வடகிழக்கு என்பதை ஏற்றுக் கொண்டுள்ளது, கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்கள் தங்களது நிலங்களை பாதுகாப்பதற்காக பல இலட்சம் உயிர்களையும், உடமைகளையும் இழந்துள்ளார்கள், பல போராளிகள் தங்களது உயிர்களை தியாகம் செய்துள்ளார்கள் இவ்வாறு நாங்கள் போராடி காப்பாற்றிய நிலத்தை வேறுயாரும் ஆட்சி செய்ய தமிழர்கள் ஒருபோதும் விடமாட்டார்கள்.

வடகிழக்கை தமிழர்களிடமிருந்து பிரிப்பதற்கு அரசாங்கம் காலம் காலமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையிலேயே இந்த மாகாணசபைகளையும்,ஏனைய சபைகளையும் அரசாங்கம் உருவாக்கியுள்ளது. இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தமட்டில் வடகிழக்கு இணைந்த தாயக சுயாட்சியையே காலம் காலமாக கோரிவருகின்றது. அதனை அடைவதற்கான இராஜதந்திர போராட்டமே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த மாகாணசபை பயணம்.

இது முடிவல்ல, தமிழர்கள் சுயாட்சி பெறுவதற்கான முதல்படி எனவே கிழக்கு மாகாண சபையையோ, அல்லது ஏனைய விடயங்களையோ வைத்துக்கொண்டு தமிழர்களின் ஆட்சியை தீர்மானிப்பது கேலிக்கூத்தான விடயம்.

வடகிழக்கை யார் ஆட்சி செய்யவேண்டும் என்பதை தமிழர்கள் உட்பட உலகமே ஏற்கனவே தீர்மானித்து விட்டது என்றார்.

TAGS: