தோட்டத் தொழிலாளர்களுக்கே தரிசு நிலங்கள் : ஐ தே க

eelam24713cஇலங்கையின் மலையகப் பகுதிகளில் தரிசாக உள்ள நிலங்களை வெளியாருக்கு பிரித்துக் கொடுக்காமல் அங்குள்ள தோட்டப்புறங்களில் வேலை செய்யும் மக்களுக்கே பிரித்து கொடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது.

இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் யோகராஜன் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினார்.

அரசு இதற்கான ஆரம்பகட்ட பணிகளில் இறங்கியுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

நுவரேலியா மாவட்ட காணி மீள்திருத்தச் சபையின் அதிகாரிகள் தோட்டம் தோட்டமாகச் சென்று, 1442 ஹெக்டேர் காணி தரிசு நிலமாக இருப்பதாக கணக்கிட்டுள்ளார்கள் எனவும் யோகராஜன் கூறுகிறார்.

காணிகள் பிரித்துக் கொடுக்கப்படும் போது இனபேதம் இல்லாமல் தோட்டங்களில் பணியாற்றும் அனைவரும் பயன்பெறும் வகையில் அது நடைபெற வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது.

இதனிடையே மலையக மக்களின் நலன்களை முன்னெடுப்பதற்காக மேலும் ஒரு கூட்டணி இன்று உருவாக்கப்ப்ட்டுள்ளது.

மலையக தேசிய முன்னணி எனும் அக்கூட்டணியில் மலையக மக்கள் முன்ன்னி, ஜனநாயக இடதுசாரி முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ், தொழிலாளர் விடுதலை முன்னணி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இவை அனைத்தும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன. சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வு காணப்படும் வரையில், அபிவிருத்திப் பணிகள் எந்த வகையிலும் பலனளிக்காது என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் உறுப்பினர் டாக்டர் மோகன் அக்கூட்டத்தில் தெரிவித்தார்

மலையக மக்களை பல காலமாக பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி கட்சிகள் அம்மக்களின் நலன்களை போதிய அளவில் முன்னெடுக்கவில்லை என்றும் அந்தக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. -BBC

TAGS: