இலங்கையில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், ஆளுங்கட்சிகாக வேட்பாளர்களை தேர்வு செய்யும் நடவடிக்கையில் இராணுவம் இறங்கியுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
ஆனால் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகள் நியாயமற்றது என்று இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
வடக்கு உட்பட மூன்று மாகாண சபைத் தேர்தல்களுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் வியாழக்கிழமை(25.7.13) அன்று தொடங்கின. எனினும் பிரதான கட்சியின் உறுப்பினர்கள் யாரும் முதல் நாளன்று வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமது வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்து வருவதாக கூறும் அதன் தலைவர் இரா சம்பந்தர், இன்னும் ஒரிரு நாட்களில் அவை சமர்பிக்கப்படும் என்று பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
கூட்டமைப்பிலுள்ள ஐந்து கட்சியின் தலைவர்களுடைய பூரண சம்மதத்துடன் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணின் உறுப்பினர்கள் இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிட விரும்பினால், அதற்கு எவ்விதமான ஆட்சேபணையும் இருக்க முடியாது என்றும், அதற்கு பரிபூரணமான ஒத்துழைப்பு அளிக்கப்படும் எனவும் சம்பந்தர் கூறுகிறார். -BBC