இந்தியா – இலங்கையின் உள்விவகாரங்களில் அழுத்தங்களை கொடுத்து வருகிறது: தொம்பகொட சாரானந்த தேரர்

man mohan with raja pakseஇலங்கை என்ற நாடு இந்தியாவின் ஒரு காலனித்துவ நாடோ, மாநிலமோ அல்லாத போதும் இந்தியா, இலங்கையின் உள்விவகாரங்களில் அழுத்தங்களை கொடுப்பதாக தேசிய சங்க சம்மேளத்தின் செயலாளர் தொம்பகொட சாரானந்த தேரர் தெரிவித்தார்.

கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத்தின் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தற்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகமாக மாறியுள்ளது.

13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் 13வது திருத்தச் சட்டத்திற்கும் அப்பால் சென்ற அதிகாரத்தை கோருகிறார். இந்த சட்டத்தினால் நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் அவர் இதனை கூறியுள்ளார்.

இவர்கள் ஆளுநர் பதவிக்கு பொருத்தமானவர்களை பெயரிட்டு கொண்டு, ஈழ அரசாங்கத்தை கட்டியெழுப்பும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முதலமைச்சரின் அதிகாரத்தை அதிகரித்து கொண்டு, இவர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்க நிலைமையை ஏற்படுத்த பார்க்கின்றனர்.

13வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளாது, இவர்கள் மாகாண சபையை ஏற்படுத்தும் ஆபத்தை அரசாங்கம் உணரவேண்டும்.

இலங்கையை இலக்காக கொண்டு சர்வதேச ரீதியில் பெரும் அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. இந்தியா, இலங்கையை தனது மற்றுமொரு காலனியாகவும் மாநிலமாகவும் பார்க்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இருந்தே தற்போது தமது தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறது. இந்தியாவின் தேவைக்கு ஏற்பவே முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா தனது நாட்டில் இருக்கும் பிரச்சினைகளை தீர்க்க முடியாத காரணத்தினாலா இலங்கையின் பிரச்சினைகளில் இப்படி தலையிடுகிறது?.

இந்தியாவில் எத்தனை பேருக்கு இருக்க வீடுகள் இல்லை?. அங்கு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் துயரத்தில் வாடும் போது, வடக்கில் உள்ள மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்து கொடுக்க இந்தியாவுக்கு இருக்கும் தேவை என்ன?.

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடும் தேவையே இந்தியாவுக்கு உள்ளது என்றார்.

TAGS: