வடக்கு, கிழக்கில் தமிழர்கள் தமது உரிமைகளை பெற்று கௌரவமாக வாழ விருப்புவது போலவே முஸ்லிம் மக்களும் சிங்கள மக்களும் சகல உரிமைகளும் பெற்று சமத்துவமாகவும் கௌரவமாகவும் வாழ வேண்டும் என்றே விரும்புகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டணிக்குமிடையில் வடமாகாணத் தேர்தல் சம்பந்தமான முக்கிய சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றது.
இச்சந்திப்பிலேயே கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனநாயகத்தை நம்புகிறோம். அதன் வழி நடக்கிறோம், வடக்கில் முஸ்லிம்கள் அனைவரும் மீண்டும் குடியேற வேண்டும். அங்கு அவர்கள் நிம்மதியாக வாழ வேண்டும். அது அவர்களின் அடிப்படை பிறப்புரிமை. அதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்ற உத்தரவாதத்தையும் எம்மால் தர முடியும்.
எதிர்வரும் மாகண சபைத் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தும் எண்ணம் த.தே. கூட்டமைப்பிற்கு இருக்கிறது. அமையப் போகும் வடமாகாண சபையில் முஸ்லிம் சமூகத்தின் கௌரவத்தையும் சுயமரியாதையும் பாதுகாக்கக்கூடிய பிரதிநிதிகளாக அவர்கள் இருக்க வேண்டும் என்பதையே விரும்புகின்றோம். அந்த வகையில் வடமாகாணத் தேர்தலில் முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பை நாம் எதிர்பார்க்கிறோம்.
நீங்கள் எதிர்பார்ப்பது போல் உடன்பாடுகளுடன் கூடிய ஒப்பந்தங்களின் அடிப்படையில் நாம் இணைந்து செயற்பட முடியும் என தெரிவித்தார்.
மேலும் இச்சந்திப்பின் போது, தமிழ் முஸ்லிம் சமூகங்கள் பரஸ்பர புரிந்துணர்வுடன் பொது நலன்களில் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் கடந்த காலங்களில் அவ்வாறான புரிந்துணர்வை கட்டியெழுப்பக்கூடிய சந்தர்ப்பங்கள் குறிப்பாக, கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது இருந்தும்கூட அந்த சந்தர்ப்பங்கள் சமூக நலன்களை முதன்மைப்படுத்திய வகையில் சரியாகப் பயன்படுத்தப்படாத நிலையில் தற்போது வடமாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் தருணத்தில், தமிழ் முஸ்லிம் உறவினை வலுப்படுத்தி வடக்கு, கிழக்குப் பிராந்தியங்களில் இரு சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்க அரசியலைக் கட்டியெழுப்புவதற்கான தொடக்க புள்ளியாக, இந்த மாகாண சபைத் தேர்தலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.
அத்தகையதொரு நம்பிக்கை தரும் முன்னெடுப்பை த.தே.கூட்டமைப்பு மேற்கொள்ளுமாயின் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான கூட்டணி அதனை வரவேற்பதோடு, அதற்கான பூரண ஒத்துழைப்பினை வழங்குவதற்கு தயாராய் இருப்பதாகவும் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இந்த சந்திப்பின்போது எடுத்துக் கூறினார்.
மேலும், வட மாகாண முஸ்லிம்களின் அபிலாஷைகளும் நிறைவேற்றப்படும் வகையிலான உத்தரவாதங்கள் த.தே. கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்க்கப்படுவது இரு சமூகங்களுக்கிடையிலான பரஸ்பர நம்பிக்கையை கட்டியெழுப்ப உதவும் எனவும் எடுத்துரைக்கப்பட்டது.
கலந்துரையாடப்பட்ட விடயங்களின் அடிப்படையில் மீண்டும் கூடி இறுதி தீர்மானங்கள் எட்டப்படும் என இரு தரப்பினரும் நேற்றைய கூட்டத்தில் இணக்கம் கண்டதாக பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக அதன் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரும், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான கூட்டணி சார்பாக, பொறியியலாலர் அப்துர் ரஹ்மான் மற்றும் நஜா முஹம்மத், சிராஜ் மஜுஹர், டாக்டர் ரிபாஸ், அப்துல் வாஜித், அஸ்மின் அய்யூப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழர் நாடு/இலங்கை/ மற்றும் உலங்கெங்கும் உள்ள தமிழர் தேசிய இயக்கங்கள் பேரளவு மட்டுமே உள்ளது. இதுவரை எந்த உருப்படியான அரசியல் தீர்வுகளையும் கண்டதில்லை. அறிக்கைகள்/கூட்டங்கள்/மாநாடுகள் நடத்தி இன்னும் தமிழ் மக்கள் அடிப்படை தேவைகள் கூட தீர்வாகவில்லை. இன்னும் எத்தனை ஆண்டுகள் தாம் இந்த சாவடி சந்திப்பு? இலங்கையில் சோகம் மாநாடு நடத்தத் தமிழ் தேசியம் ஆதரவளிக்க கூடாது.காரணம் அதில் தமிழ் ஈழம் பற்றி பேரம் பேச யாருமில்லை.
அய்யா இலங்கையில் நடக்க போகும் சோகம் மாநாடு எதிர்ப்பு பற்றி
செம்பருத்தி கட்டுரை ஏழுத வேண்டும்.உலக மக்கள் காரணங்கள்
புரிந்து ஒரு எதிர்ப்பு அலையை முன்னெடுக்க வேண்டும்.மலேசியாவிலிருந்து இந்த ஆர்பாட்டம் தொடங்க வேண்டும்.