மட்டக்களப்பில் தேசிய சமாதான பேரவையின் கருத்தரங்கில் குழப்பம்

eelam28713aஇலங்கையின் கிழக்கே, மட்டக்களப்பில் தேசிய சமாதானப் பேரவையினால் நடத்தப்பட்ட கருத்தரங்கு திடீர் குழப்பம் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

காணிப் பிரச்சினைகள் தொடர்பாக நடத்தப்பட்ட இந்தக் கருத்தரங்கில் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்தன தேரர் தலையிட்ட சூழ்நிலையில் ஏற்பட்ட குழப்பத்தை காவல்துறையினர் கட்டுப்படுத்தியுள்ளனர்.

அதனையடுத்து கருத்தரங்கும் ஏற்பாட்டாளர்களினால் இடைநிறுத்தப்பட்டது.

போருக்கு பின்னர் இலங்கை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட எல். எல். ஆர்.சி எனப்படும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் காணிப் பிரச்சினைகள் மற்றும் அவற்றிக்கான தீர்வு தொடர்பாக சில பரிந்துரைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

இந்த பரிந்துரைகளை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் தேசிய சமாதன பேரவையினால் மாவட்டங்கள் தோறும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மூவின மக்களுக்கும் விளக்கமளிக்கும் வகையில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற இக்கருத்தரங்கில் சிவில் சமூக பிரதிநிதிகள், கிராமிய தலைவர்கள் மற்றும் கல்வித்துறை சார்ந்தவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கருத்தரங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை, அங்கு சிலருடன் வந்த மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் தலைமை பிக்குவான அம்பிட்டியே சுமணரத்ன தேரர், தான் அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்க வாய்ப்பு கேட்டதையடுத்து அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அவர் தனது தொனிப் பொருளைத் தாண்டி பேசுவதை ஏற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்போது ஆத்திரமுற்ற சுமன ரத்தன தேரர், ஏற்பாட்டாளர்களைத் தாக்கியதாகவும் அதனையடுத்தே அக்கருத்தரங்கில் குழப்ப நிலை காணப்பட்டாகவும் அதில் கலந்து கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த பௌத்த மதகுரு அழைப்பு இன்றியே கருத்தரங்கிற்கு வருகை தந்திருந்தார் என்றும் ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, தாக்குதலில் தான் ஈடுபட்டதாக ஏற்பாட்டாளர்களினாலும் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களினாலும் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மறுத்தார்.

தானே அங்கு தாக்கப்பட்டதாக அவர் கூறினார்.

சம்பவம் தொடர்பாக இருதரப்பிலும் வாக்கு மூலங்களை பதிவுசெய்து விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக காவல்துறை கூறுகின்றது. -BBC

TAGS: