தேர்தலுக்கு முன்னர் காணி, பொலிஸ் அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டும்!– ஹெல உறுமய

jathika-hela-Urumayaஎதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சி கோரியுள்ளது.

குறிப்பாக வட மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்படுவதற்கு முன்னதாக பிரிவினைவாதத்தை தூண்டும் சகல சரத்துக்களும் நீக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

இவ்வாறு காணி, பொலிஸ் அதிகாரங்கள் நீக்கப்படாவிட்டால், 13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைப்பது குறித்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிலிருந்து வெளியேற நேரிடும் என கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் குறித்து அதன் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா, அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளார்.

இந்த அறிக்கை கட்சியின் மத்திய செயற்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அதன் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

காணி பொலிஸ் அதிகாரங்கள் ரத்து செய்யப்படாவிட்டால் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதில் பயனில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, காணி, பொலிஸ் அதிகாரங்கள் வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக ரத்து செய்யப்படாவிட்டால் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிலிருந்து விலகிக்கொள்ளப் போவதாக அமைச்சர் விமல் வீரவன்ச அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

TAGS: