தமிழ் மக்களின் இதயத்துடிப்பை இந்தியாவும் சர்வதேச சமூகமும் அறிந்து கொள்ள வடக்கு மாகாண சபை தேர்தல், களம் அமைத்து கொடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர் எம். ராஜேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் வாழும் சகல தமிழ் மக்களும், கூட்டமைப்பிற்கு பின்னால் அணித்திரண்டு தமிழர்களின் பலத்தை நிரூபித்து காட்ட வேண்டும். இது காலத்தின் தேவை.
போர் நடைபெற்ற காலத்தில் புலிகள் ஆயுதரீதியில் பலமாக இருந்தனர். இதனால் இன்றைய ஜனாதிபதி, போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக, தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்க 13வது அரசியல் அமைப்புச் சட்டத்தை ஆதரித்தார், மாகாண சபையை பலமிக்க சபையாக மாற்ற வேண்டும் எனக் கூறினார்.
ஆனால் தற்போது 13வது அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்த முற்படுகின்றனர். மாகாண சபைகள் காணி, போலிஸ் அதிகாரங்கள் இன்றி குறைமாத குழந்தைகள் போல் உள்ளன.
இந்த குறைமாத குழந்தையையும் அழித்து விட வேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவன்ஸ, ஜாதிக ஹெல உறுமய கட்சித் தலைவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றனர்.
இதன் மூலம் அரசாங்கத்தின் உண்மையான முகம் என்ன என்பது புலனாகியுள்ளது என்றார்.