வடக்கில் நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் நடைபெறுமா? -இரா.சம்பந்தன்

sambanthan press meetசர்வதேச அழுத்தத்தின் மத்தியிலேயே வடக்கு மாகாணசபை தேர்தல் நடத்தப்படுகின்றது. எனவே சர்வதேசம் தேர்தலை நடத்துவதற்கும் மேலாக தேர்தல் நீதியான முறையில் நடைபெறவும் சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கட்சியின் யாழ்.மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

குறித்த சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது.

இவ்வாண்டின் முற்பகுதியில் இடம்பெற்ற ஜெனீவா கூட்டத்தொடரில் புரட்டாதி மாதம் தேர்தல் நடத்தப்படும் என்பது கூறப்பட்டுள்ளது. அதனை சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக இதனை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் தற்போது நியமப் பத்திரங்கள் பெறப்படுகின்றது.

தேர்தல் நடைபெறும் என நாம் கூட்டமைப்பு நம்புகின்றது. வடக்கு மாகாணத்தில் 25வருடங்களின் பின்னர் தேர்தல் நடத்தப்படுகின்றது.

எனவே மக்கள் தங்கள் பிரதிநிதிகளை சுதந்திரமான முறையில் தெரிவு செய்வதற்கு, அவர்களுக்குள்ள ஜனநாயக உரித்தை பயன்படுத்துவதற்கு யாரும் தடைவிதிக்க கூடாது.

முன்னர் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல்களின்போதும், பாராளுமன்ற தேர்தல்களின் போதும் பல அச்சுறுத்தல்களும், ஜனநாயக மறுப்புக்களும், மக்களுக்கும், வேட்பாளர்களுக்கும் விடுக்கப்பட்டிருக்கின்றது.

எனவே இங்கு சுதந்திரமான பொதுச்சேவை, காவல்துறை, தேர்தல் ஆணையகம் இல்லை.

அவற்றை ஏற்படுத்துவதற்கென அமைக்கப்பட்டிருந்த 13ம் சரத்தின் அதிகாரங்களும் நீக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் நடைபெறப் போகும் தேர்தல் நீதியான முறையில், சுதந்திரமாக நடக்குமா என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னமும் அவநம்பிக்கையுடனேயே இருக்கின்றது.

எனவே மக்களுக்கு, எங்கள் அரசியல் நிலைப்பாடுகளை மிக விரைவில் நாங்கள் கூறுவோம். அதற்கு மக்கள் உரிய அங்கீகாரம் அளிப்பார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பு நம்புகிறது என அவர் மேலும் குறிபிட்டுள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது உரையில் குறிப்பிடுகையில்,

மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். மக்கள் வாக்களிக்கச் செல்லும் போது வாக்காளர் அடையாள அட்டைகளும், பறிக்கப்பட்டும், குண்டுகள் வெடிக்கப்பட்டும் நடந்த சம்பவங்களை நாங்கள் அறிந்திருக்கிறோம்.

இந்ந நிலையில் மக்களுடைய தீர்ப்பே இறுதியானதும், பெறுமதியானதும் கூட.

இதுவரை காலமும் ஒரு ஆயுதக் குழுவின் கீழ் அவர்களது ஆயுதங்களின் அதிகாரத்தின் கீழ் ஆட்சி வைக்கப்பட்டிருந்ததாக இலங்கை அரசும், அதற்கு ஆதரவான சில நாடுகளும் கூறிக்கொண்டிருந்தன.

இந்நிலையில் மக்கள் ஏகோபித்த ஆதரவினை வழங்கவேண்டும்.

அந்த ஆதரவிற்கு. அந்த ஆணைக்கு சர்வதேசமும், இலங்கை அரசாங்கமும் நிச்சயமாக பதில் சொல்லி ஆகவேண்டிய கட்டாயம் உள்ளது என்றார்.

TAGS: